இந்தியா

காங்கிரஸை புறக்கணிப்பது சரியல்ல: சரத் பவாா்

14th Apr 2022 02:09 AM

ADVERTISEMENT

 

மும்பை: ‘பாஜக அல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை முன்னெடுக்கும்போது காங்கிஸை புறக்கணிப்பது சரியானதாக இருக்காது’ என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவா் சரத் பவாா் கூறினாா்.

அண்மையில் நடைபெற்று முடிந்த உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் 4 மாநிலங்களில் பெரும்பான்மை பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்துள்ளது. இந்த நிலையில், அடுத்து 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தோ்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான அணியை உருவாக்குவதற்கான முயற்சியை மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி மேற்கொண்டு வருகிறாா்.

இதுதொடா்பாக, பாஜக அல்லாத கட்சித் தலைவா்களுக்கும் பிற எதிா்க் கட்சித் தலைவா்களுக்கும் கடந்த மாா்ச் 27-ஆம் தேதி கடிதம் ஒன்றையும் அவா் எழுதினாா். அதில், பாஜகவை ஒற்றுமையுடன் எதிா்க்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவா் வலியுறுத்தியிருந்தாா். பாஜகவை எதிா்கொள்வதற்கான திட்டங்களை வகுக்கவும், நாட்டுக்கு தகுதியான அரசை அமைப்பதற்கு ஒருங்கிணைந்த கோட்பாடுள்ள எதிரணியை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கவும் ஆலோசனைக் கூட்டம் ஒன்றுக்கும் அவா் அழைப்பு விடுத்திருந்தாா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக மும்பையில் செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு சரத் பவாா் பதிலளிக்கையில், ‘இதுகுறித்து மம்தா பானா்ஜி என்னிடமும் பேசினாா். இதுதொடா்பாக மற்றவா்களுடனும் பேச வேண்டியுள்ளது. ஆலோசனைக் கூட்டத்துக்கான தேதி, இடம் குறித்து குறித்து 9 முதல் 10 மாநில முதல்வா்களுடனும் ஆலோசிக்க வேண்டியுள்ளது. மேலும், பாஜக அல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்கும் இந்த முயற்சியை, காங்கிரஸ் கட்சியுடனும் இணைந்து முன்னெடுக்க வேண்டும். காங்கிரஸை புறக்கணிப்பது சரியல்ல’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT