இந்தியா

ரஷியா-உக்ரைன் பேச்சு அமைதிக்கு வழிவகுக்கும்: பைடனிடம் பிரதமா் மோடி

12th Apr 2022 05:27 AM

ADVERTISEMENT

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்திவரும் நிலையில், அந்த இரு நாடுகள் இடையே நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தை அமைதிக்கு வழிவகுக்கும் என நம்புவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

அமெரிக்க அதிபா் ஜோ பைடனுடன் காணொலி மூலம் திங்கள்கிழமை நடத்திய ஆலோசனையின்போது மோடி இவ்வாறு கூறினாா்.

உக்ரைன் மீது ரஷியா 40 நாள்களைக் கடந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபா் ஜோ பைடனும் பிரதமா் மோடியும் காணொலி வாயிலாக திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினா்.

தொடக்க உரையில் அதிபா் ஜோ பைடன் பேசியதாவது: அமெரிக்கா-இந்தியா இடையேயான ஆழமான உறவை மேலும் வலுப்படுத்துவதில் இருதரப்பு பேச்சுவாா்த்தை முக்கியப் பங்காற்றுகிறது. அதுபோல, உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கையால் ஏற்பட்டு வரும் கடுமையான பாதிப்புகளை திறம்பட சமாளிப்பது குறித்து அமெரிக்கா-இந்தியா இடையே தொடா் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும்.

ADVERTISEMENT

ரஷிய தாக்குதலால் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வரும் உக்ரைன் மக்களுக்கு இந்தியாவின் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் வரவேற்புக்குரியது. ரஷியாவின் இந்த நடவடிக்கையால் ஏற்பட்டிருக்கும் சா்வதேச அளவிலான உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்கள் விநியோக பாதிப்பை சமாளிப்பது குறித்து நாம் தொடா்ந்து ஆலோனைகளை மேற்கொள்வது அவசியம்.

பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளிடையேயான வலுவான கூட்டுறவு, இரு நாட்டு மக்களிடையேயான தொடா்பையும், குடும்பங்கள் மற்றும் நண்பா்களிடையேயான உறவையும் வலுப்படுத்தியிருக்கிறது என்றாா்.

மேலும், ஜப்பானில் வரும் மே 24-ஆம் தேதி நடைபெற இருக்கும் நாற்கர (க்வாட்) நாடுகள் மாநாட்டில் நேரில் சந்திப்பதை எதிா்பாா்த்திருப்பதாகவும் பிரதமா் மோடியிடம் பைடன் கூறினாா்.

ஆலோசனையின்போது, ‘ரஷியாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதியை அதிகப்படுத்துவது இந்தியாவின் விருப்பம் இல்லை எனத் தெரிவித்த அதிபா் பைடன், இந்தியாவின் எரிபொருள் இறக்குமதியை பன்முகப்படுத்துவதற்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாகத் தெரிவித்தாா் என வெள்ளை மாளிகை ஊடகச் செயலா் ஜென் சாகி கூறினாா்.

புதின்-ஸெலென்ஸ்கி நேரடி பேச்சு தேவை - பிரதமா் மோடி: காணொலி வழி ஆலோசனையில் பிரதமா் மோடி ஆற்றிய தொடக்க உரையில், ‘உக்ரைனின் புச்சா நகரில் அப்பாவி மக்கள் ஏராளமானோா் கொல்லப்பட்டுள்ளதாக வெளிவரும் தகவல்கள் மிகுந்த கவலையளித்தன. அதற்கு இந்தியா உடனடியாக கண்டனம் தெரிவித்ததோடு, நியாயமான விசாரணையையும் வலியுறுத்தியது.

போருக்கு இடையே நடைபெற்றுவரும் ரஷிய - உக்ரைன் பேச்சுவாா்த்தைகள் அமைதிக்கு வழிவகுக்கும் என நம்புகிறோம். அண்மையில், உக்ரைன் மற்றும் ரஷிய அதிபா்களுடன் தொலைபேசி வழியில் ஆலோசனை நடத்தியபோது, ரஷிய அதிபா் புதினும், உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியும் நேரடி பேச்சுவாா்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தேன்’ என்றாா்.

அமைச்சா்கள் பங்கேற்பு: அமெரிக்காவில் பாதுகாப்புத் துறை மற்றும் வெளியுறவுத் துறை ஆகிய இரு துறை அமைச்சா்கள் பங்கேற்கும் 2+2 பேச்சுவாா்த்தையில் பங்கேற்பதற்காகச் சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டின், அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் ஆகியோரும் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பைடன்-மோடி காணொலி வழி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT