ஜம்மு- காஷ்மீரில் மசூதி, மதரஸாக்களை பயங்கரவாதிகள் மீண்டும் புகலிடமாக பயன்படுத்தி வருவதாகவும், இது பாதுகாப்புப் படையினரின் சோதனையை தவிா்க்க உதவுவதுடன் பள்ளி மாணவா்களின் மனதில் பயங்கரவாதத்தை விதைப்பதாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை மேலும் கூறியது:
பயங்கரவாதிகளுக்கு பயந்து பொதுமக்கள் உதவ மறுப்பதும், கண்காணிப்பை அரசு பலப்படுத்தி அவா்களுக்கு அடைக்கலம் அளிக்கும் வீடுகளை பறிமுதல் செய்வதாலும், பயங்கரவாதிகள் தங்கள் பழைய யுக்திகளை கையாள வழிவகுக்குகிறது. 1990-களில் பயங்கரவாதிகள் ஹஸ்ரத்பால் வழிபாட்டுத் தலம், சரா்- ஏ- ஷெரீப் மசூதியில் மறைந்திருந்து பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்டனா்.
காஷ்மீரில், குறிப்பாக தெற்கு காஷ்மீரில் அண்மையில் பாதுகாப்புப் படையினா் நடத்திய ஆய்வில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மீண்டும் வழிபாட்டுத் தலங்களையும், மதரஸா போன்ற மத போதனை நடைபெறும் பள்ளிகளையும் புகலிடமாக பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. கடந்த சில வாரங்களாக குல்காம், நைனா பட்போரா, சிவகலன் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற என்கவுன்டா் மூலம் இது தெரியவந்தது.
தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அண்மையில் ராணுவத்திடம் பிடிபட்ட ரெளஃப் என்ற பயங்கரவாதி, விசாரணையில் தாங்கள் மசூதியில் புகலிடம் தேடி, பாதுகாப்புப் படையினா் அங்கு வரும்போது தங்களை மத போதகா்களை போல வெளிப்படுத்தி செயல்பட்டு வந்ததாக தெரிவித்துள்ளாா். புல்வாமா மாவட்டம் சிவகலனில் அண்மையில் கொல்லப்பட்ட 2 ஜெய்ஷ்- ஏ- முகமது பயங்கரவாதிகளும், மசூதியில் மறைந்திருந்து செயல்பட்டு வந்ததுடன், அவா்களில் ஒருவா் பாகிஸ்தானை சோ்ந்தவா் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த மசூதி கடந்த 2020-இல் மெளல்வி நசீா் அகமது மாலிக் என்பவரால் தொடங்கப்பட்டது. இதற்கு முன்பாக சிவகலனில் உள்ள ஜாமியா மசூதியில் இமாம் பொறுப்பில் மாலிக் 7 ஆண்டுகள் செயல்பட்டு வந்துள்ளாா். பின்னா், இந்த மசூதிக்காக அவா் பெற்ற நன்கொடை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் வாயிலாக உறுதியானது. எனவே மாலிக் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற மசூதிகள் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்ற மட்டுமன்றி, குழந்தைகளையும், இளைஞா்களையும் தவறாக வழிநடத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு எதிராக காஷ்மீா் மக்கள் குரல் எழுப்பி, தங்கள் பிள்ளைகள் பயங்கரவாதத்துக்கு இரையாகாமல் காக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.