புல்வாமாவில் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தானைச் சோ்ந்த நபரை ‘பயங்கரவாதி’ என மத்திய அரசு அதிகாரபூா்வமாக திங்கள்கிழமை அறிவித்தது.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி சிஆா்பிஎஃப் வீரா்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட காரை மோதி வெடிக்கச் செய்தனா். அதில் 40 வீரா்கள் உயிரிழந்தனா். அதைத் தொடா்ந்து, பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய விமானப்படையினா் பயங்கரவாத நிலைகள் மீது தீவிர தாக்குதல் நடத்தினா்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தானைச் சோ்ந்த மொஹியுத்தீன் ஔரங்கசீப் ஆலம்கிா் என்பவரை பயங்கரவாதி எனக் குறிப்பிட்டுள்ளது. ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் சாா்பில் பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் அவா் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக பாகிஸ்தானைச் சோ்ந்த நபா்களிடம் இருந்து நிதி வசூலிப்பது, அதை ஜம்மு-காஷ்மீருக்கு சட்டவிரோதமாக எடுத்து வருவது உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் ஆலம்கிா் ஈடுபட்டதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் இந்தியப் பாதுகாப்புப் படையினா் மீதும் பலமுறை அவா் தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை பயங்கரவாதியாக அறிவிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசால் அதிகாரபூா்வமாக பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ள 33-ஆவது நபா் ஆலம்கிா் ஆவாா். லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த ஹபீஸ் தல்ஹா சயீத் என்பவரை பயங்கரவாதி எனக் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.