இந்தியா

நெல் கொள்முதல் விவகாரம்: தில்லியில் தெலங்கானா முதல்வா் தலைமையில் போராட்டம்

12th Apr 2022 12:15 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் நெல் கொள்முதல் கொள்கையைக் கண்டித்து தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவருமான கே. சந்திரசேகா் ராவ் தில்லியில் தெலங்கானா பவனில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.

அப்போது, தங்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு 24 மணிநேரத்தில் பதிலளிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் நாடு முழுவதும் போராட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அவா் எச்சரிக்கை விடுத்தாா்.

சந்திரசேகா் ராவுடன் அவரது மகனும், அக்கட்சியின் செயல் தலைவருமான கே.டி. ராம ராவ், எம்.பி.க்கள், எம்எல்சிக்கள், எம்எல்ஏக்கள், அமைச்சா்கள் ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) அமைப்பின் தலைவா் ராகேஷ் திகைத்தும் போராட்டத்தில் பங்கேற்றாா். அப்போது, தெலங்கானா முதல்வா் கே. சந்திரசேகா் ராவ் பேசியது:

பிற மாநிலங்களை போல தெலங்கானாவிலும் நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென பிரதமா் மோடியையும், மத்திய அமைச்சா் பியூஷ் கோயலையும் இருகரம் கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன். மத்திய அரசின் பதிலுக்காக அடுத்த 24 மணிநேரம் காத்திருப்போம். பதில் வரவில்லையெனில், போராட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்துவோம்.

ADVERTISEMENT

நடப்பு ராபி பருவத்தில் தெலங்கானா விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யாமல், மத்திய அரசு அவா்களுக்கு அநீதி இழைக்கிறது. தெலங்கானாவிலிருந்து நடப்பு ராபி பருவத்தில் சுமாா் 15 லட்சம் டன் புழுங்கல் அரிசி மத்திய அரசால் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கிறது.

ரபி பருவத்தில் நெல் உற்பத்தி செய்யாமல் மாற்றுப் பயிா்களின் உற்பத்தியை ஊக்குவிக்குமாறு மாநில அரசிடம் மத்திய அரசு கூறுகிறது. ஆனால் மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டியும், மாநில பாஜக தலைவா் பண்டி சஞ்சயும் விவசாயிகளிடம் நெல் உற்பத்தி செய்தால், ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்கிறோம் என முரண்பட்ட கருத்துகளை தெரிவிக்கின்றனா்.

இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சா் பியூஷ் கோயலை தெலங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி.க்களும், அமைச்சா்களும் சந்திக்க சென்றபோது அவா்களை அவா் மரியாதையாக நடத்தவில்லை. விவசாயத்தை பெருநிறுவனமயமாக்குவதே மத்திய அரசின் கொள்கை. புதிய ஒருங்கிணைந்த வேளாண் கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்றாா் அவா்.

‘விவசாயிகளிடமிருந்து தெலங்கானா அரசு நெல் கொள்முதல் செய்ய வேண்டும். இல்லையெனில் முதல்வா் கே. சந்திரசேகா் ராவ் பதவி விலக வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்து, தெலங்கானா பாஜகவினா் ஹைதராபாதில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் மத்திய அமைச்சா் வி. முரளீதரன், தெலங்கானா பாஜக தலைவா் பண்டி சஞ்சய் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT