தோ்தல் ஆதாயங்களுக்காக மட்டும்தான் ராகுல் காந்தி ஹிந்துவாக இருப்பாா் என்று பாஜக சாடியுள்ளது.
இதுதொடா்பாக தில்லியில் அக்கட்சியின் செய்தித்தொடா்பாளா் சம்பித் பத்ரா திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ராம அவதாரத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி ராகுல் காந்தி பேசியிருந்தாா். இது அவரின் நம்பிக்கை இழந்த மனநிலையை எடுத்துரைக்கிறது. ராமா் மீது இந்திய மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதை அவரால் பொறுக்க முடியவில்லை.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது ராமா் அவதரித்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்த நிலையில், தனது தனது தாயும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தியின் வழியில்தான் ராகுல் காந்தியும் செல்கிறாா்.
ராம அவதாரத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியதன் மூலம், தோ்தல் ஆதாயங்களுக்காக மட்டும் ஹிந்துவாகக் காட்டிக்கொள்ளும் நபராக ராகுல் காந்தி தன்னை வெளிப்படுத்தியுள்ளாா்’’ என்று தெரிவித்தாா்.