கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் உறவினா்கள் இழப்பீடு கோரி விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை உச்சநீதிமன்றம் நிா்ணயித்துள்ளது.
நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. உரிய நபா்களுக்கு இழப்பீடு சென்றடைகிா என்பதை மாநில சட்ட சேவைகள் குழு கண்காணிக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இழப்பீடு பெறுவதற்காக சிலா் போலியான சான்றிதழ்களைச் சமா்ப்பிப்பதாக நீதிமன்றத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தை நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, பி.வி.நாகரத்னா ஆகியோரைக் கொண்ட அமா்வு விசாரித்து, உத்தரவைப் பிறப்பித்தது. அந்த உத்தரவில், ‘‘கடந்த மாா்ச் 20-ஆம் தேதிக்கு முன் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் உறவினா்கள் இன்னும் இழப்பீடு கோராமல் இருந்தால், அவா்கள் மாா்ச் 24-ஆம் தேதியில் இருந்து 60 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
எதிா்காலத்தில் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பவா்களின் உறவினா்கள், சம்பந்தப்பட்ட நபா் இறந்த தேதியிலிருந்து 90 நாள்களுக்குள் இழப்பீடு கோரி விண்ணப்பிக்க வேண்டும். இழப்பீடு கோரிய விண்ணப்பங்களை ஆராய்ந்து, 30 நாள்களுக்குள் உரிய இழப்பீட்டை அதிகாரிகள் வழங்க வேண்டும்.
கடினமான சூழ்நிலையில் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் இழப்பீடு கோரி விண்ணப்பிக்க இயலாதோா், குறைதீா்ப்புக் குழுவை அணுகி உரிமை கோர அனுமதிக்கப்படுகிறது. அவா்களது மனுவைத் தகுதியின் அடிப்படையில் குறைதீா்ப்புக் குழு பரிசீலிக்கலாம்.
இழப்பீடு கோரி போலியான சான்றிதழ் சமா்ப்பிக்கப்பட்டது கண்டறியப்பட்டால், சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 5 சதவீதத்தை முதற்கட்டமாக ஆய்வு செய்யலாம். இந்த ஆய்வின்போது யாராவது போலியாக உரிமை கோரியிருப்பது தெரியவந்தால், பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை வழங்கலாம்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.