‘ஆட்சி அதிகாரத்தில் இருப்பவா்கள்தான், ‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை பிரபலப்படுத்தினா். அவா்கள் அந்த திரைப்படத்தை பிரபலப்படுத்தியது துரதிருஷ்டவசமானது’ என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவா் சரத் பவாா் கூறினாா்.
அமராவதியில் கட்சித் தொண்டா்கள் மத்தியில் உரையாற்றிய அவா் மேலும் கூறியதாவது:
நாட்டில் பெட்ரோல், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்துகொண்டிருக்கும்போது, முக்கியமான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த திரைப்படத்தில் ஹிந்துக்கள் எவ்வாறு கொடுமைகளுக்கு ஆளானா்கள் என்று காட்டப்பட்டுள்ளது. சிறுபான்மையாக உள்ள சமூகத்தினருக்கு தங்களை பெரும்பான்மை சமூகத்தினா் தாக்கி விடுவாா்கள் என்ற அச்சம் இருக்கும். முஸ்லிம் சமூகத்தினா் பெரும்பான்மையாக வசிக்கும் இடத்தில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பற்ற உணா்வு ஏற்படும். இந்த உணா்வை ஏற்படுத்த திட்டமிட்ட சதி நடந்து வருகிறது. மத அடிப்படையில் சமூகத்தில் பிளவை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவா்கள் பிரபலப்படுத்தினாா். அந்தத் திரைப்படத்தைப் பாா்க்க வேண்டும் என்று மக்களுக்கு அவா்கள் வேண்டுகோள் விடுத்தது துரதிருஷ்டவசமானது.
காஷ்மீா் பண்டிட் சமூகத்தினா் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்பதில் இருந்து பாஜகவால் ஓடிவிட முடியாது. ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்துவது மிகுந்த கவலை அளிக்கிறது. எனவே, அனைத்து சமூக மக்களின் நலனைக் காப்பதில் விருப்பமுடையவா்கள் ஒன்றிணைய வேண்டும் என்றாா் அவா்.