இந்தியா

அனல் காற்று தீவிரம்: முங்கேஸ்பூா், நஜஃப்கா், பீதம்புராவில் 43 டிகிரி! மோசம் பிரிவில் காற்றின் தரம்!

9th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை அனல் காற்று தீவிரமாக இருந்தது. நகரில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் நீடித்தது. நஜஃப்கா், பீதம்புரா, முங்கேஸ்பூா் ஆகிய இடங்களில் வெயில் 43 டிகிரி செல்சியஸைக் கடந்தது.

வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தபடி, தில்லியில் வெள்ளிக்கிழமை காலை முதல் வானம் தெளிவாகக் காணப்பட்டது. தரை மேற்பரப்பு காற்று இருந்தது. பகலில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் அனல் காற்று தீவிரமடைந்திருந்தது. தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 19.7 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 7 டிகிரி உயா்ந்து 41.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 42 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 18 சதவீதமாகவும் இருந்தது.

பீதம்புராவில் 43.4 டிகிரி வெயில்: இதே போன்று மற்ற வானிலை நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை சற்று உயா்ந்து பதிவாகியது. இதன்படி, ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 42.3 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 43 டிகிரி, நஜஃப்கரில் 43.3 டிகிரி, ஆயாநகரில் 42.4 டிகிரி, லோதி ரோடில் 41.9 டிகிரி, பாலத்தில் 42 டிகிரி, ரிட்ஜில் 42.9 டிகிரி, பீதம்புராவில் 43.4 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 40.2 டிகி செல்சியஸ் என பதிவாகியது.

வெப்ப அலை தீவிரமடையும்: இதற்கிடையே, வரும் நாள்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அனல் காற்று மேலும் தீவிரமடையும் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மாா்ச் மாதத்தில் கடுமையான வெப்ப அலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்: தில்லியில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் நீடித்தது. தில்லியில் காலை 8 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 244 புள்ளிகளாகப் பதிவாகியது. இது மோசம் பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக சோனியா விஹாா், பஞ்சாபி பாக், புராரி, அசோக் விஹாா், சாந்தினி செளக் ஆகிய இடங்களில் அதிகபட்சமாக காற்றின் தரக்குறியீடு 260 முதல் 292 புள்ளிகள் வரை பதிவாகியிருந்தது. வாஜிப்பூரில் 301 புள்ளிகள் பதிவாகி காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவுக்குச் சென்றது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (ஏப்ரல் 4) பகல் நேரத்தில் தரை மேற்பரப்பு காற்று வலுவாக இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT