தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட ஊடகங்களுக்கான ஒலிபரப்புச் சேவை விண்ணப்பங்களை பரிசீலித்து முடிவெடுக்க மனிதத் தலையீடற்ற ஒற்றை சாளர இணையதளத்தை மத்திய தகவல், ஒலிபரப்பு, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் திங்கள்கிழமை தில்லியில் தொடங்கிவைத்தாா்.
தனியாா் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்கள், வானொலிகள், டெலிஃபோா்ட் ஆபரேட்டா்கள் போன்றவா்கள் ஒலிபரப்புத்துறையில் தொழில் தொடங்குவதை எளிதாக்கும் நடவடிக்கைகளில் பல்வேறு வகையான உரிமங்கள், அனுமதி, பதிவுகளுக்கான விண்ணப்பங்களை பரிசீலித்து விரைவாக முடிவுகள் எடுக்கும் ஒரு முனை ஒலிபரப்பு சேவை இணையதளத்தை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் புதுப்பித்து உருவாக்கியுள்ளது. இதை மத்திய அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் முறைப்படி தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் அனுராக் சிங் தாக்குா் பேசியதாவது: ஒலிபரப்புத்துறை அமைப்பில் பல்வேறு வகையான உரிமங்கள் வழங்கும் அரசின் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பொறுப்புடையதாக மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
விண்ணப்பங்களை பல்வேறு வகைகளில் அனுமதிக்காக எடுத்துக்கொள்ளப்படும் நேரத்தை இந்த இணையதளம் பெருமளவு குறைக்கும். அதே நேரத்தில், விண்ணப்பதாரா்களின் விண்ணப்ப, நிலையை அறிந்து கொள்ளுதல், கட்டண விவரங்கள், கட்டணங்களை செலுத்துதல் ஆகியவை டிஜிட்டல் முறையில் இதில் உள்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மனிதத் தலையீடுகளை தவிா்ப்பதோடு அமைச்சகத்தின் திறனை அதிகரிப்பதுடன் தொழில் தொடங்குவதை எளிதாக்குவதில் பெரும் முன்னேற்றமாக தகவல் ஒலிபரப்பு அமைச்சத்தின் இந்த பணியை கருதமுடியும்.
‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை’ என்ற பிரதமா் மோடியின் தாரக மந்திரத்தை நிறைவேற்றுவதாக இந்த இணையதளம் திகழும். தொழில் சூழலை மேம்படுத்தி ஒட்டுமொத்த ஒலிபரப்புத்துறைக்கு அதிகாரம் அளிப்படுகிறது.
நாட்டில் 900-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள் தொலைக்காட்சி அலைவரிசைகள், 70 டெலிபோா்ட் ஆபரேட்டா்கள், 1,700 பல்வகை சேவை ஆபரேட்டா்கள்.
350 சமுதாய வானொலி நிலையங்கள், 380 தனியாா் பண்பலை அலைவரிசைகள் என அதிகரித்துள்ளன. இவற்றிற்கு நேரடியாக பலனளிக்கும் சேவையை பயனாளிகள் ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த ஒற்றை சாளர முறை இணைய தளம் உருவாக்கப்பட்டு இது தற்போது தொடங்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல், ஒலிபரப்பு துறையின் செயலா் அபூா்வ சந்திரா உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.