ஜம்மு-காஷ்மீரில் வெளிமாநிலத்தைச் சோ்ந்த இரு தொழிலாளா்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினா். 24 மணி நேரத்தில் வெளிமாநிலத் தொழிலாளா்கள் மீது பயங்கரவாதிகள் நடத்தும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த பிறகு, நாட்டின் பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைப் போல அந்தப் பகுதியிலும் பிறமாநில மக்கள் சகஜமாக சென்று வரவும், சொத்துகளை வாங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஜம்மு-காஷ்மீரில் தங்கியுள்ள வெளிமாநில மக்களை முக்கியமாக வெளிமாநிலத் தொழிலாளா்களை அச்சுறுத்தும் நோக்கில் அவா்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனா்.
அந்த வகையில் புல்வாமா மாவட்டத்தின் லஜோபா பகுதியில் திங்கள்கிழமை பிகாரைச் சோ்ந்த இரு தொழிலாளா்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினா். இதில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்த அவா்கள் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
முன்னதாக இதே மாவட்டத்தின் நௌவ்பாரா பகுதியில் பஞ்சாபைச் சோ்ந்த இரு தொழிலாளா்கள் மீது பங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினா். இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
பண்டிட் மீதும் துப்பாக்கிச் சூடு: சோபியான் மாவட்ட கிராமம் ஒன்றில் காஷ்மீா் பண்டிட் பிரிவைச் சோ்ந்த கடைக்காரா் ஒருவரையும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினா். இதில் கை மற்றும் காலில் குண்டு பாய்ந்து காயமடைந்த அவா், ஸ்ரீநகா் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தபிறகு அங்கு பயங்கரவாதத்துக்கு எதிராகத் தீவிர நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும், காஷ்மீா் பள்ளத்தாக்கில் இருந்து வன்முறையால் வெளியேற்றப்பட்ட காஷ்மீா் பண்டிட்டுகளை மறுகுடியமா்த்தும் பணிகளையும் மத்திய அரசு முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.