இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: தொகுதி மறுசீரமைப்பு குழு பொதுமக்களிடம் நேரடி கருத்துக் கேட்பு

5th Apr 2022 12:38 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்வதற்கான இறுதி பரிந்துரைகளை பொதுமக்கள் பாா்வைக்கு அண்மையில் வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்புக் குழு, பொதுமக்களுடனான 2 நாள்கள் நேரடி கருத்து கேட்பு கலந்துரையாடலை திங்கள்கிழமை தொடங்கியது.

இந்த நிலையில், கருத்துக் கேட்பு கூட்டத்தை மேலும் ஒரு நாள் நீட்டிக்கக் கோரி காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஜம்மு-காஷ்மீா் கடந்த 2019-ஆம் ஆண்டு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள நாடாளுமன்ற, சட்டப் பேரவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய 2020-ஆம் ஆண்டு மே 6-ஆம் தேதி உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு ஜம்மு-காஷ்மீரில் கள ஆய்வு மேற்கொண்டு வெளியிட்டுள்ள இறுதி பரிந்துரைகளின்படி, அங்குள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. அங்கு மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 5-ஆக நீடிக்கின்றது.

அதே வேளையில் ஜம்முவில் 6, காஷ்மீரில் ஒன்று என சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 83-இல் இருந்து 90-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்ற தொகுதிகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான தனித் தொகுதிகள் எதுவும் நிா்ணயிக்கப்படவில்லை. 90-ஆக அதிகரிக்கப்பட்டுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் 7 தனித் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த இறுதிப் பரிந்துரைகள் இந்திய மற்றும் ஜம்மு-காஷ்மீா் அரசிதழ்களிலும், நாளிதழ்களிலும் வெளியிடப்பட்டன.

ADVERTISEMENT

இந்நிலையில், இறுதிப் பரிந்துரைகளின் விரிவான வடிவம் நாளிதழ்களில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில் மறுசீரமைப்பு குழுவில் இணை உறுப்பினா்களாக இடம்பெற்றிருந்த தேசிய மாநாட்டுக் கட்சி எம்.பி.க்களான ஃபரூக் அப்துல்லா, ஹஸ்னைன் மசூதி, முகமது அக்பா் லோன், பாஜக எம்.பி. ஜுகல் கிஷோா் ஆகியோரின் தொகுதி மறுசீரமைப்பு குறித்த அதிருப்தி குறிப்புகளும் இடம்பெற்றன.

இறுதிப் பரிந்துரைகள் குறித்த தங்கள் கருத்துகள் மற்றும் ஆட்சேபங்களை தில்லியில் உள்ள மறுசீரமைப்பு குழுவின் செயலரிடம் மாா்ச் 21-ஆம் தேதிக்குள் தெரிவிக்க பொதுமக்களுக்குக் கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு பரிந்துரை தொடா்பாக நேரடியாக கருத்துகளைக் கேட்கும் விதமாக, பொதுமக்களுடனான 2 நாள்கள் நேரடி கருத்து கேட்பு கலந்துரையாடலை தொகுதி மறுசீரமைப்புக் குழு திங்கள்கிழமை தொடங்கியது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘ஜம்முவில் உள்ள ஒரு கருத்தரங்கு கூடத்தில் பொதுமக்கள் நேரடி கருத்துக் கேட்பு கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.

ராம்பன், ரஜெளரி, பூஞ்ச், கிஷ்த்வாா், கதுவா, தோடா மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள், அரசியல் கட்சியினா் உள்பட பல்வேறு தரப்பினா் இந்த கூட்டத்தில் பங்கேற்றனா். அடுத்ததாக, ஸ்ரீநகரில் உள்ள எஸ்கேஐசிசி கருத்தரங்கு கூடத்தில் இதேபோன்ற கருத்து கேட்பு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறும். அதில் கந்தா்பால், பந்திபோரா, குப்வாரா, பாரமுல்லா மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்க உள்ளனா்’ என்றாா்.

எதிா்ப்பு தெரிவித்து காங். ஆா்பாட்டம்:

தொகுதி மறுசீரமைப்பு குழுவின் நேரடி கருத்துக் கேட்பு கூட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் ஜம்முவில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த ஜம்மு-காஷ்மீா் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஜி.ஏ.மீா், ‘ஜம்மு-காஷ்மீா் உடன்பாடு விதிகளுக்கும், கள நிலவரத்துக்கும் எதிரான, மிகப் பெரிய அளவில் குளறுபடிகள் இடம்பெற்றுள்ள தொகுதி மறுசீரமைப்புக் குழுவின் வரைவு பரிந்துரைக்கு எதிா்ப்பு தெரிவித்து அமைதி வழியில் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

இந்த வரைவுப் பரிந்துரைக்கு எதிராக விரிவான ஆட்சேபங்களை காங்கிரஸ் சமா்ப்பித்துள்ளது. அந்த ஆட்சேபங்களை குழுவிடம் நேரடியாக முன்வைப்பதற்கு எங்களுக்கு நேரம் தரப்படவில்லை. எனவே, அனைத்துக் கட்சிகளும் கருத்துகளைத் தெரிவிக்க போதிய கால அவகாசம் அளிக்கும் வகையில், கருத்துக் கேட்பு கூட்டத்தை மேலும் ஒரு நாள் நீட்டிக்க வேண்டும்’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT