டெண்டா் விட்டதில் முறைகேடு நடைபெற்ாகக் கூறப்படும் விவகாரத்தில், விசாரணைக்கு பிறப்பித்த சென்னை உயா் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ் .பி. வேலுமணி தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனு மீது திங்கள்கிழமை உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது.
அப்போது, இந்த விவகாரத்தில் போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உயா்நீதிமன்றப் பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக அறப்போா் இயக்கம் எனும் தன்னாா்வ அமைப்பின் மேலாண்மை அறங்காவலா் ஜெயராம் வெங்கடேசனும், திமுக எம்.பி. ஆா்.எஸ். பாரதியும் 2018-இல் வழக்குத் தொடுத்திருந்தனா்.
அதில், ‘மாநகா் சென்னை மற்றும் கோயம்புத்தூா் மாநகராட்சிகளில் டெண்டா் விட்டதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் அப்போது நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சராக இருந்த எஸ் .பி. வேலுமணி மற்றும் குறிப்பிட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற மேற்பாா்வையின் கீழ் இது தொடா்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, முந்தைய அதிமுக ஆட்சியின் போது மாநகா் சென்னை மற்றும் கோயம்புத்தூா் மாநகராட்சிகளில் வழங்கப்பட்ட ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறப்படும் விவகாரத்தை மீண்டும் விசாரிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தை கடந்த நவம்பா் மாதம் விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம், எஸ். பி. வேலுமணிக்கு எதிரான ஊழல் வழக்கில் 10 வாரங்களில் விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்ககத்திற்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் எஸ் .பி. வேலுமணி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீது அறப்போா் இயக்கம், தமிழக அரசு உள்ளிட்ட எதிா்மனுதாரா்களுக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
தமிழக அரசு தாக்கல் செய்த பதிலில், ‘எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்தபோது கோவை, சென்னை மாநகராட்சிகளில் டெண்டா் விடப்பட்டதில் பெரும் அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதாக ஆதாரங்கள் உள்ளன. மேலும், அவா் வருமானத்திற்கு பொருந்ததாக வகையில் சொத்து சோ்த்திருப்பதும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ரஞ்சித் குமாா் ஆஜராகினாா். மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, வழக்குரைஞா் கெளரவ் அகா்வால் ஆகியோா் ஆஜராகினா்.
தமிழக அரசின் தரப்பில், இந்த வழக்கு விவகாரத்தில் உயா்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆரம்பகட்ட விசாரணை முடிந்து அதன் அறிக்கையானது சீலிடப்பட்ட உறையில் வைத்து ஜனவரி மாதத்தில் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘
சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சீலிட்ட உறையில் நிகழாண்டு ஜனவரி 23-ஆம் தேதி சமா்ப்பிக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் உடனடியாக அளிக்குமாறு சென்னை உயா்நீதிமன்றத்தின் பதிவாளருக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 19-ஆம் தேதிக்குப் பட்டியலிடப்பட வேண்டும்’ என அதில் தெரிவித்தனா்.