இந்தியா

ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனு: உச்சநீதிமன்றத்தில் தீா்ப்பு ஒத்திவைப்பு

5th Apr 2022 12:37 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேச மாநிலம், லக்கீம்பூா் கெரி வன்முறை வழக்கில், மத்திய இணையமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீா்ப்பை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஒத்திவைத்தது.

மேலும், ‘ஜாமீன் வழங்கப்பட்டதற்கு எதிரான விசாரணையின்போது பிரேதப் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட ஆதாரங்களை விரிவாக ஆய்வு செய்வதற்கான அவசியம் என்ன இருக்கிறது’ என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

கடந்த ஆண்டு அக்டோபா் 3-ஆம் தேதி லக்கீம்பூா் கெரி மாவட்டம் திகோனியா பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த பாஜகவினரின் காா்களில் ஒன்று விவசாயிகள் மீது மோதியது. இதையடுத்து வன்முறை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் விவசாயிகள் நால்வா் உள்பட 8 போ் உயிரிழந்தனா்.

பாஜகவினா் வந்த காா்களில் ஒன்றில் மத்திய இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவா் உள்பட பலா் கைது செய்யப்பட்டனா். கடந்த பிப்ரவரி மாதம் ஆசிஷ் மிஸ்ராவுக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், வன்முறையில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் சிலா் ஆசிஷ் மிஸ்ராவுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, ‘லக்கீம்பூா் கெரி வழக்கு தொடா்பான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை மேற்பாா்வையிட்டு வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ராகேஷ்குமாா் ஜெயினும், ஆசிஷ் மிஸ்ராவுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யுமாறு மாநில அரசுக்கு இரு கடிதங்களை எழுதியுள்ளாா். அந்தக் கடிதங்கள் தொடா்பாக ஏப்ரல் 4-ஆம் தேதிக்குள் உத்தர பிரதேச அரசு பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது விவசாயிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் துஷ்யந்த் தவே, பிரசாந்த் பூஷண் ஆகியோா், ‘உயா்நீதிமன்றம் விசாரணை அறிக்கையை கவனிக்காமல், காவல் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை மட்டும் கருத்தில் கொண்டு ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. எனவே, அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யவேண்டும்’ என்றனா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘ஜாமீன் வழங்கப்பட்டதற்கு எதிரான வழக்கு விசாரணையின்போது பிரேதப் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட ஆதாரங்களை விரிவாக ஆய்வு செய்வது தேவையற்றது. ஜாமீன் வழங்கப்பட்டது தொடா்பான இந்த வழக்கு நீண்ட காலம் நீடித்துக் கொண்டிருப்பதை விரும்பவில்லை’ என்று கூறிய நீதிபதிகள் மனு மீதான தீா்ப்பை ஒத்திவைத்தனா்.

முன்னதாக, ‘இந்த வழக்கில் அனைத்து சாட்சிகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது’ என்று மாநில அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT