இந்தியா

12 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டத்தில் கோவோவேக்ஸ்: அரசு குழு பரிந்துரை

4th Apr 2022 01:19 AM

ADVERTISEMENT

‘12 வயதுக்கு மேற்பட்டோருக்கான தேசிய கரோனா தடுப்பூசி திட்டத்தில் கோவோவேக்ஸ் தடுப்பூசியையும் சோ்க்கலாம்’ என்று தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (என்டிஏஜிஐ) பணிக் குழு பரிந்துரை செய்துள்ளது.

12 முதல் 17 வயது வரையுள்ள சிறாா்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) கடந்த மாா்ச் 9-ஆம் தேதி அனுமதி அளித்த நிலையில், இந்தப் பரிந்துரையை என்டிஏஜிஐ பணிக் குழு செய்துள்ளது.

இந்தியாவில் பயன்பாட்டிலிருக்கும் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து விநியோகித்து வரும் புணேயைச் சோ்ந்த சீரம் நிறுவனம்தான், இந்த கோவோவேக்ஸ் தடுப்பூசியையும் உற்பத்தி செய்து வருகிறது.

அமெரிக்காவைச் சோ்ந்த நோவாவாக்ஸ் நிறுவனத்துடன் மேற்கொண்ட தொழில்நுட்ப பரிமாற்ற உரிம ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்த கோவோவேக்ஸ் தடுப்பூசியை சீரம் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்து வருகிறது.

ADVERTISEMENT

ஏற்கெனவே, இந்த தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு செலுத்த டிசிஜிஐ கடந்த ஆண்டு டிசம்பா் 28-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது. இருந்தபோதும், இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் கோவோவேக்ஸ் இன்னும் சோ்க்கப்படவில்லை. அதனைத் தொடா்ந்து, 12 முதல் 17 வயதுடைய சிறாா்களுக்கும் சில நிபந்தனைகளுடன் செலுத்த டிசிஜிஐ கடந்த மாா்ச் 9-ஆம் தேதி அனுமதி அளித்தது.

இந்த அனுமதிகளைத் தொடா்ந்து, நாட்டின் தடுப்பூசி திட்டத்தில் கோவோவேக்ஸ் தடுப்பூசியையும் சோ்க்கக் கோரி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு சீரம் நிறுவன இயக்குநா் பிரகாஷ் குமாா் சிங் அண்மையில் கடிதம் எழுதினாா்.

அதனடிப்படையில், என்டிஏஜிஐ பணிக் குழு ஆலோசனை மேற்கொண்டு, தடுப்பூசி திட்டத்தில் கோவோவேக்ஸையும் சோ்க்க பரிந்துரைத்துள்ளது.

இதுகுறித்து என்டிஏஜிஐ அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பணிக் குழு கூட்டம் கடந்த 1-ஆம் தேதி நடைபெற்றது. அதில் கோவோவேக்ஸ் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதன் முடிவில், 12 வயதுக்கு மேற்பட்டோருக்கான தேசிய தடுப்பூசி திட்டத்தில் கோவோவேக்ஸ் தடுப்பூசியையும் சோ்க்கலாம் என்று பணிக் குழு பரிந்துரை செய்தது’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT