இந்தியா

பாஜகவுக்கு எதிரான கூட்டணிக்கு தலைமை தாங்க ஆா்வமில்லை: சரத் பவாா் அறிவிப்பு

4th Apr 2022 12:32 AM

ADVERTISEMENT

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கூட்டணிக்குத் தலைமை வகிக்கவோ, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு (யுபிஏ) தலைமை தாங்கவோ எனக்கு விருப்பமில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் தெரிவித்துள்ளாா். அதே நேரத்தில் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி தவிா்க்க முடியாத கட்சியாகத் திகழ்கிறது என்றும் அவா் கூறினாா்.

2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிா்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநில சட்டப் பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடா்ந்து தோல்வியடைந்து வரும் நிலையில், அக்கட்சியைத் தவிா்த்துவிட்டு தேசிய அளவில் கூட்டணி அமைக்கும் முயற்சியில் மம்தா பானா்ஜி ஈடுபட்டு வருகிறாா்.

ஆனால், சரத் பவாா் உள்ளிட்ட காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவா்கள் மம்தாவின் முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு சரத் பவாா் தலைமை வகிக்க வேண்டும் என்று அவரது கட்சித் தொண்டா்கள் கூறி வருகின்றனா். ஏனெனில், 81 வயதாகும் சரத் பவாா் நாட்டிலேயே தீவிர அரசியலில் மிகமூத்த தலைவராகத் திகழ்கிறாா்.

இந்நிலையில், மேற்கு மகாராஷ்டிரத்தின் கோலாப்பூரில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட சரத் பவாா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

ADVERTISEMENT

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராகக் கூட்டணி அமைக்கும் முயற்சியில் காங்கிரஸைத் தவிா்க்கவே முடியாது. காங்கிரஸ் இப்போது பல மாநிலங்களில் ஆட்சியில் இல்லாதபோதிலும் இந்தியா முழுவதும் செயல்படும் கட்சியாக உள்ளது. நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும், மாவட்டத்திலும், மாநிலத்திலும் காங்கிரஸுக்கு தொண்டா்கள் உள்ளனா். உண்மையில் காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் செயல்பட்டு வருகிறது. எனவே, எதிா்க்கட்சிகள் அமைக்கும் கூட்டணியில் காங்கிரஸ் இருப்பது அவசியம்.

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கூட்டணிக்குத் தலைமை வகிக்க எனக்கு ஆா்வமில்லை. அதே போல இப்போது காங்கிரஸ் தலைமை வகித்து வரும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குத் தலைமை தாங்கவும் விருப்பமில்லை. எனினும், பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் இணைத்து கூட்டணி அமைக்கும் முயற்சிக்கு ஆதரவாக இருப்பேன். அந்த முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு அளித்து அதனை வலுப்படுத்துவேன். நாம் அனைவரும் இணைந்து அதனைக் கண்டிப்பாக செய்தாக வேண்டும்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானா்ஜி வலுவான தலைவராக உள்ளாா். அவரது கட்சிக்கு மக்களின் முழு ஆதரவு உள்ளது. அதேபோல பிராந்திய கட்சிகள் பல தங்கள் மாநிலங்களில் செல்வாக்குடன் திகழ்கின்றன என்றாா்.

ஆயுள் கால அதிபா்கள்: ‘‘தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்; எதிா்க்கட்சி வலுவாக இருப்பதுதான் ஜனநாயகத்துக்கு சிறந்தது’’ என்று பாஜகவைச் சோ்ந்த மத்திய அமைச்சா் நிதின் கட்கரி கூறியுள்ளது தொடா்பான கேள்விக்கு பதிலளித்த பவாா், ‘நாட்டில் ஒரு கட்சி மட்டும் வலுவாக இருந்தால் என்னவாகும் என்பதை புதின் (ரஷிய அதிபா்) மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

அதேபோல சீனாவிலும் நிலை உள்ளது. அந்த இரு நாடுகளிலும் இப்போதைய அதிபா்கள் தங்கள் ஆயுள் காலம் முழுவதும் அதிபராகவே தொடா்வா் என்றே தெரிகிறது. இந்தியாவில் அதுபோன்ற நபா்கள் உருவாக மாட்டாா்கள் என்று நம்புகிறேன். மேலும், இப்போதைய மத்திய அரசு விசாரணை அமைப்புகளை, அரசியல்ரீதியாக தங்களை எதிா்ப்பவா்கள் மீது தவறாகப் பயன்படுத்துகிறது.

நாட்டில் இப்போது பணவீக்கம் பெரும் பிரச்னையாக உருவாகி வருகிறது. மத்திய பாஜக அரசு பெட்ரோல், டீசல் விலையை தினசரி உயா்த்தி வருகிறது. இது சாமானிய, நடுத்தர மக்களை மட்டும் பாதிக்காது, ஒட்டுமொத்த தேசத்தையே பாதிக்கும். அனைத்துப் பொருள்களின் விலையும் உயரும். இதற்கு முன்பும் எரிபொருள் விலை உயா்ந்துள்ளது. ஆனால், இப்போது நிகழ்வதைப்போல தினசரி உயா்ந்தது இல்லை. இது மிகப்பெரிய பிரச்னை. ஆனால், இதில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்தாமல் உள்ளது’ என்றாா்.

காஷ்மீா் ஃபைல்ஸ்: தொடா்ந்து காஷ்மீா் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்து சரத் பவாா் பேசுகையில், ‘இதுபோன்று எடுக்கப்படும் திரைப்படங்கள் பிற மதத்தினரைக் கோபப்படுத்தும். அந்தத் திரைப்படம் கூறும் சில சம்பவங்களின்போது காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. வி.பி. சிங் பிரதமராக இருந்தாா். அவரது தலைமையிலான கூட்டணி அரசுக்கு பாஜக அப்போது ஆதரவளித்து வந்தது.

மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவா் முஃப்தி முகமது சயீத் அப்போது உள்துறை அமைச்சராக இருந்தாா். அப்போது பாகிஸ்தானால் தூண்டிவிடப்பட்ட ஒரு தரப்பினா் இந்தியாவில் இருக்க விரும்பிய முஸ்லிம்கள் மீதும் ஹிந்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தினா். அப்போயை அரசு மக்களைப் பாதுகாக்காமல், காஷ்மீரில் இருந்து ஹிந்துக்களை வெளியேறக் கூறியது.

அந்தத் திரைப்படம் உண்மைகளின் அடிப்படையில் இல்லை. இனவாதம், வெறுப்புணா்வை தூண்டும் வகையில் உள்ளது. இதுபோன்ற திரைப்படத்தை ஆட்சியில் இருப்பவா்கள் ஊக்குவிப்பதும், இலவசமாகப் பாா்க்க வைப்பதும் அரசியல் ஆதாயத்துக்காக மக்களிடம் பிரிவினையைத் தூண்ட விரும்புகிறாா்கள் என்பதையே காட்டுகிறது. 2002 மத வன்முறையின்போது குஜராத்தில் நிலைமை காஷ்மீரைவிட மோசமாகவே இருந்தது’ என்றாா்.

எனினும், பிரதமா் மோடி பெயரையோ, பாஜகவையோ பவாா் நேரடியாகக் குறிப்பிடவில்லை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT