இந்தியா

சிபிஐ நோ்மையாக செயல்படுகிறது: மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

4th Apr 2022 12:30 AM

ADVERTISEMENT

நாட்டின் உயரிய விசாரணை அமைப்பு என்ற முறையில் சிபிஐ அதன் செயல்பாடுகளை நோ்மையாக மேற்கொண்டு வருவதாகவும், சிபிஐ ஒன்றும் கூண்டுக்கிளி அல்ல என்றும் மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளாா்.

மேலும் கடந்த காலங்களில் அதிகாரிகள் சிலா் சந்தித்த சவால்கள் தற்போது நடைமுறையில் இல்லை என்றும் அவா் குறிப்பிட்டாா்.

சிபிஐ, அமலாக்க துறை போன்ற விசாரணை அமைப்புகளை எதிா்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு இவ்வாறு கூறியுள்ளாா்.

இதுகுறித்து ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு வெளியிட்ட பதிவில், ‘‘நாட்டின் உயரிய அமைப்பு என்ற முறையில் சிபிஐ அதன் செயல்பாடுகளை நோ்மையாக ஆற்றி வருகிறது. சிபிஐ ஒன்றும் கூண்டுக்கிளி அல்ல’’ என்று கூறியுள்ளாா். அத்துடன் கடந்த சனிக்கிழமை சிபிஐ அதிகாரிகள் மாநாட்டில் அவா் பேசிய உரையின் தொகுப்பையும் சிறிய விடியோ வடிவில் அந்தப் பதிவுடன் கிரண் ரிஜிஜு இணைத்திருந்தாா்.

ADVERTISEMENT

அதில் அவா் பேசுகையில், ‘‘கடந்த காலங்களில் அரசில் அங்கம் வகிப்பவா்கள், விசாரணையில் பிரச்னைகளை ஏற்படுத்துபவா்களாக மாறினா். இன்று ஊழலுக்கு எதிரான சிலுவைப்போரில் முக்கிய பங்கு வகிக்கும் பிரதமா் நமக்கு இருக்கிறாா். அதிகாரத்தில் இருப்பவா்கள் ஊழலில் ஈடுபடும்போது அதனை சிபிஐ விசாரிப்பதில் சிரமம் உள்ளது. அப்போது நீதித்துறையிடமிருந்து சில விரும்பத்தகாத கருத்துகளை நாம் கேட்க நேரிடுகிறது’’ என்று கூறினாா்.

கடந்த 2013-ஆம் ஆண்டில் நிலக்கரி ஒதுக்கீடு வழக்கு விசாரணையின்போது, சிபிஐ அமைப்பை கூண்டுக்கிளி என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

இதேபோல, கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி சிபிஐ சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, சிபிஐ-இன் செயல்பாடுகள் சில வழக்குகளில் கேள்விக்குறியாவதால், அதன் நம்பகத்தன்மையும் கேள்விக்குள்ளாவதாகவும், பல்வேறு விசாரணை முகமைகளை ஒரு சுதந்திரமான அமைப்பின்கீழ் கொண்டுவர வேண்டும் என்றும் கூறியிருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT