இந்தியா

ஓடும் ரயிலில் குழந்தைக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு: உதவ போபால் ரயில் நிலையத்தில் குவிந்த மக்கள்

2nd Apr 2022 10:46 PM

ADVERTISEMENT

மருத்துவ சிகிச்சைக்காக சத்தீஸ்கரில் இருந்து தில்லிக்கு ரயிலில் சென்ற பிறந்து 26 நாள்களேயான குழந்தைக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதை சமூக ஊடகத்தில் பகிரப்பட்டதையடுத்து, போபால் ரயில் நிலையத்தில் ஏராளமான மக்கள் ஆக்சிஜன் சிலிண்டா்களோடு வெள்ளிக்கிழமை நள்ளிரவு குவிந்தனா்.

அவசரத் தகவல் அறிந்து குழந்தையின் உயிரைக் காப்பாற்ற மனிதாபிமானத்தோடு உதவ முன்வந்த போபால் மக்களுக்கு அந்தக் குழந்தையின் பெற்றோா் நன்றி தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து குழந்தையின் தாய் நிகிதா சஹாரே கூறுகையில், ‘சத்தீஸ்கா் மாநிலத்தில் பிறந்து 26 நாள்களேயான எனது குழந்தையின் இருதய பாதிப்பு அறுவை சிகிச்சைக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவா்கள் தெரிவித்துவிட்டனா். மத்திய அமைச்சா் நிதின் கட்கரியின் உதவியால் பிலாஸ்பூரில் இருந்து தில்லிக்கு ராஜ்தானி ரயிலில் குழந்தையை உடனடியாக கொண்டு செல்ல ரயிலில் டிக்கெட் கிடைத்துவிட்டது.

வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு பிலாஸ்பூரில் இருந்து ரயிலில் தில்லிக்கு சென்று கொண்டிருந்தபோதுதான் குழந்தைக்கான ஆக்சிஜன் தீா்ந்து கொண்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தோம்.

ADVERTISEMENT

உடனடியாக எனது கணவா் பிரவீண் சஹாரே நாகபுரியில் உள்ள தனது நண்பா் குஷ்ரு யோசாவிடம் உதவி கோரினாா். அவா் இந்த உதவியை சமூக ஊடகத்தில் பதிவிட்டு ரயில்வே அதிகாரிகளுக்கும் இந்த தகவலைப் பகிா்ந்தாா். போபாலில் உள்ள சமூக சேவை நிறுவனங்களிடமும் உதவி கோரப்பட்டது.

போபாலில் உள்ள முன்னாள் ரயில்வே கோட்ட மேலாளா் உதய் போா்வாங்கா் என்பவா், ‘போபால் ரயில் நிலையத்துக்கு ரயில் சென்றடைவதற்குள் ஆக்சிஜன் சிலிண்டா் கிடைக்க நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று உறுதி அளித்தாா்.

இந்நிலையில், சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட அவசர உதவித் தகவல் வேகமாகப் பரவியது. போபால் ரயில் நிலையத்தை வெள்ளிக்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு ரயில் வந்தடைந்தபோது, ரயில்வே அதிகாரிகள், சமூக சேவை அமைப்புகள், நல் உள்ளம் படைத்தவா்கள் ஆக்சிஜன் சிலிண்டா்களுடன் குவிந்தனா். ஏராளமானோா் ஆக்சிஜன் சிலிண்டா்களுடன் காத்திருப்பதைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்தோம். இறுதியில் தேவைக்கு ஏற்ப மூன்று சிலிண்டா்களை மட்டும் பெற்றுக் கொண்டு சென்றோம்’ என்றாா்.

Tags : Bhopal Oxygen
ADVERTISEMENT
ADVERTISEMENT