இந்தியா

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பொருளாதார, வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

2nd Apr 2022 04:39 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் காணொலி வாயிலாக கையெழுத்திடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி ஆற்றிய உரையில்,  எனது நண்பர் ஸ்காட் உடன் ஒரு மாதத்தில் எனது மூன்றாவது நேருக்கு நேர் உரையாடல் இதுவாகும். கடந்த வாரம் நடைபெற்ற காணொலி உச்சி மாநாட்டில் மிகவும் பயனுள்ள விவாதத்தை நாங்கள் நடத்தினோம். ​​பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்குமாறு எங்கள் குழுக்களுக்கு அப்போது அறிவுறுத்தியிருந்தோம். இன்று இந்த முக்கிய ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த அசாதாரண சாதனைக்காக, இரு நாட்டு வர்த்தக அமைச்சர்கள் மற்றும் அவர்களது அதிகாரிகளை மனதார வாழ்த்துகிறேன்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமரும் தற்போதைய பிரதமர் மோரிசனின் வர்த்தகத் தூதுவருமான டோனி அபோட்டையும் நான் குறிப்பாக வாழ்த்த விரும்புகிறேன். செயல்முறையை விரைவுப்படுத்த அவரது முயற்சிகள் உதவின.

ADVERTISEMENT

மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு முக்கியமான ஒப்பந்தம் நிறைவடைந்திருப்பது இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கை எந்தளவுக்கு உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது உண்மையில் நமது இருதரப்பு உறவுக்கு ஒரு முக்கியமானத் தருணம். பரஸ்பர தேவைகளை பூர்த்தி செய்யும் பெரும் ஆற்றலை நமது பொருளாதாரங்கள் கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பரிமாற்றத்தை இந்த ஒப்பந்தம் எளிதாக்குகுவதோடு உறவுகளை மேலும் வலுப்படுத்துகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் குறித்த திறமையான மற்றும் வெற்றிகரமான பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளின் குழுக்களையும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.

இன்றைய நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மோரிசனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் தேர்தலை வெற்றிகரமாக நடத்த எனது வாழ்த்துகள். மேலும், நாளை நடைபெறவுள்ள உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்திருந்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT