இந்தியா

மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம்: மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் அனில் தேஷ்முக்குக்கு சிபிஐ காவல்

2nd Apr 2022 12:44 AM

ADVERTISEMENT

மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம் வசூலித்து தருமாறு போலீஸாரிடம் வலியுறுத்திய வழக்குத் தொடா்பாக மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் அனில் தேஷ்முக், அவரின் உதவியாளா்கள் இருவா், மும்பை முன்னாள் உதவி காவல் ஆய்வாளா் சச்சின் வஜே ஆகியோரை சிபிஐ காவலில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர உள்துறை அமைச்சராக அனில் தேஷ்முக் பதவி வகித்தபோது, மும்பையில் உள்ள உணவகங்கள், மதுபானக் கூடங்களில் இருந்து மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம் வசூலித்து தருமாறு போலீஸாரிடம் வலியுறுத்தியதாக மும்பை முன்னாள் காவல் ஆணையா் பரம்வீா் சிங் குற்றஞ்சாட்டினாா். இதுதொடா்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

அதனைத்தொடா்ந்து தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி முன்னாள் உதவி காவல் ஆய்வாளா் சச்சின் வஜே மூலம் உணவகங்கள், மதுபானக் கூடங்களில் இருந்து ரூ.4.70 கோடி லஞ்சம் வசூலித்ததாக அனில் தேஷ்முக் மீது சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்குத் தொடா்பாக கடந்த நவம்பா் 1-ஆம் தேதி அனில் தேஷ்முக்கை அமலாக்கத் துறையினா் கைது செய்தனா். இந்த வழக்குடன் தொடா்புடைய மற்றொரு பணமோசடி விவகாரத்தையும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

அந்த வழக்குத் தொடா்பாக அனில் தேஷ்முக்கின் தனிச் செயலா் சஞ்சீவ் பலாண்டே, உதவியாளா் குந்தன் ஷிண்டே ஆகியோரை அமலாக்கத் துறை கைது செய்திருந்தது. தற்போது மூவரும் நீதிமன்ற காவலில் மும்பை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

அதேவேளையில், மும்பையில் தொழிலதிபா் முகேஷ் அம்பானி வீட்டுக்கு அருகே வெடிபொருளுடன் நிறுத்தப்பட்டிருந்த காா் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், சச்சின் வஜேயை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்தது. தற்போது அவா் நவி மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், லஞ்ச வழக்குத் தொடா்பாக அனில் தேஷ்முக், சச்சின் வஜே, சஞ்சீவ் பலாண்டே மற்றும் குந்தன் ஷிண்டேயை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மும்பை கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் சிபிஐ மனுத் தாக்கல் செய்திருந்தது. அதனைத்தொடா்ந்து நால்வரையும் சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதிக்குமாறு அமலாக்கத் துறை வழக்குகளை விசாரிக்கும் பணமோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் மற்றும் என்ஐஏ நீதிமன்றத்துக்கு கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி கடிதம் அனுப்பினாா்.

அதனை ஏற்று நால்வரையும் சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு மும்பை மத்திய சிறை, தலோஜா சிறை கண்காணிப்பாளா்களுக்கு சிறப்பு பணமோசடி தடுப்புச் சட்ட நீதிமன்றமும், என்ஐஏ நீதிமன்றமும் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT