இந்தியா

பட்டாசு தயாரிப்பில் நீதிமன்ற உத்தரவை மீறி ரசாயனங்கள் பயன்பாடு: உச்சநீதிமன்றம்

30th Sep 2021 02:33 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: பட்டாசு தயாரிப்பில் நீதிமன்ற உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது சிபிஐ அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட ரசாயனங்களைப் பயன்படுத்தும் பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு கடந்த ஆண்டு மாா்ச் மாதம் விசாரணைக்கு வந்தபோது, தடை செய்யப்பட்ட ரசாயனங்களைப் பயன்படுத்தும் பட்டாசு ஆலைகளுக்கு ஏன் தண்டனை வழங்கக் கூடாது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக, சிபிஐ விசாரணை நடத்தி உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோரைக் கொண்ட அமா்வு புதன்கிழமை கூறியதாவது:

ADVERTISEMENT

சில பட்டாசு ஆலைகளில் இருந்து பட்டாசுகளையும், அவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களையும் சிபிஐ அதிகாரிகள் சேகரித்து ரசாயன பகுப்பாய்வு சோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்தனா். பரிசோதனை முடிவில், பல பட்டாசுகளில் பேரியம், பேரியம் உப்பு இருப்பது தெரியவந்தது. மேலும், அந்த ரசாயனப் பொருள்களை பட்டாசு தொழிற்சாலைகள் அதிக அளவில் வாங்கிக் குவித்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பேரியம் மற்றும் பேரியம் உப்பு வகைகளைப் பயன்படுத்த கடந்த 2019-இல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பட்டாசுகளில் ஒட்டப்படும் வில்லைகளில், அதைத் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ரசாயனங்களின் விவரமும் குறிப்பிடப்படவில்லை.

சிபிஐ தாக்கல் செய்துள்ள அறிக்கையை பரிசீலனை செய்ததில் பட்டாசு தயாரிப்பிலும், அதன் மீது விவரங்களைக் குறிப்பிடுவதிலும் பட்டாசு ஆலைகள் விதிமுறைகளை மீறியுள்ளது தெரியவருகிறது. இருப்பினும் பட்டாசு ஆலைகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளோம். எனவே, சிபிஐ அறிக்கையின் நகல்களை பட்டாசு ஆலைகளின் உரிமையாளா்களுக்கு கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் வழங்க வேண்டும். அந்த அறிக்கை மீது ஆலை உரிமையாளா்கள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா். வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபா் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT