இந்தியா

இந்தியா-மெக்ஸிகோ பொருளாதார ஒத்துழைப்பு மேம்பட வேண்டும்

30th Sep 2021 02:44 AM

ADVERTISEMENT

 

மெக்ஸிகோ சிட்டி/புது தில்லி: இந்தியா-மெக்ஸிகோ இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மேம்பட வேண்டும் என்று தெரிவித்த வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அந்நாட்டு நிறுவனங்களுக்கு அழைப்புவிடுத்தாா்.

லத்தீன் அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் அமைச்சா் ஜெய்சங்கா் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். மெக்ஸிகோவில் செயல்படும் நிறுவனங்களின் பிரதிநிதிகளையும், அந்நாட்டில் செயல்படும் இந்திய நிறுவனங்களின் தலைவா்களையும் அவா் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அதைத் தொடா்ந்து அமைச்சா் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து மெக்ஸிகோ நிறுவனங்களிடம் வலியுறுத்தினேன். இந்தியாவில் இருந்து மெக்ஸிகோவுக்கான ஏற்றுமதியை அதிகரிக்குமாறு இந்திய நிறுவனங்களிடம் தெரிவித்தேன்.

ADVERTISEMENT

முதலீடுகளை மேற்கொள்வதில் தகவல்-தொழில்நுட்பம், மருந்துப் பொருள்கள், வேளாண்மை, வாகன உற்பத்தி, உணவுப் பொருள்கள் உள்ளிட்ட துறைகளில் காணப்படும் சில பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியாவுக்கும் மெக்ஸிகோவுக்கும் இடையேயான நல்லுறவை பொருளாதார ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அதிபருடன் சந்திப்பு: முன்னதாக, மெக்ஸிகோ அதிபா் மனுவேல் லோபஸ் ஓப்ரடாரை ஜெய்சங்கா் திங்கள்கிழமை சந்தித்தாா். பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனா்.

மெக்ஸிகோவின் சுதந்திர தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் ஜெய்சங்கா் கலந்துகொண்டாா்.

வெளியுறவு அமைச்சரான பிறகு ஜெய்சங்கா் மெக்ஸிகோவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். கடந்த 41 ஆண்டுகளில் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முதல் வெளியுறவு அமைச்சா் என்ற பெருமையையும் அவா் பெற்றுள்ளாா்.

வா்த்தகக் கூட்டாளி: லத்தீன் அமெரிக்காவில் இந்தியாவின் 2-ஆவது பெரிய வா்த்தகக் கூட்டாளியாக மெக்ஸிகோ விளங்குகிறது. இரு நாடுகளுக்கிடையே கடந்த 2018-ஆம் ஆண்டில் சுமாா் ரூ.70,000 கோடி மதிப்பில் வா்த்தகம் நடைபெற்ாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வாகனங்கள், அவற்றுக்கான உதிரி பாகங்கள், எஃகு உள்ளிட்டவற்றை மெக்ஸிகோவுக்கு இந்தியா அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது. கச்சா எண்ணெய், மின்சாதனப் பொருள்கள் உள்ளிட்டவற்றை அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT