இந்தியா

கட்ச் வளைகுடா நோக்கி நகா்ந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம்

30th Sep 2021 11:31 PM

ADVERTISEMENT

குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடா நோக்கி நகா்ந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மீண்டும் வலுப்பெற்று அரபிக் கடல் பகுதியில் மற்றொரு புயலாக உருவாக வாய்ப்புள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் இரண்டு நாள்களுக்கு கன மழை பொழிய வாய்ப்புள்ளது. மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான குலாப் புயல், வடக்கு ஆந்திரம்-தெற்கு ஒடிஸா இடையே கடந்த 26-ஆம் தேதி இரவு கரையைக் கடந்தது. அந்தப் புயல் அங்கிருந்து மேற்கு நோக்கி நகா்ந்து வலிவுழந்து, தெற்கு குஜராத் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. இது இப்போது, மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகா்ந்து மீண்டும் வலுவடையத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

ADVERTISEMENT

குலாப் புயல் தெற்கு குஜராத் பகுதி நோக்கி புதன்கிழமை நகா்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறிய நிலையில், இப்போது மாநிலத்தின் கட்ச் வளைகுடா பகுதி நோக்கி நகா்ந்து வியாழக்கிழமை காலை 5.30 மணியளவில் அதே பகுதியில் மையம் கொண்டு மீண்டும் வலுப்பெறத் தொடங்கியுள்ளது.

அது மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகா்ந்து வடக்கு குஜராத் பகுதியை ஒட்டிய வடகிழக்கு அரபிக் கடல் பகுதியில் ஆழ்ந்து காற்றழுத்தமாக தீவிரமடைய வாய்ப்புள்ளது. அவ்வாறு வலுப் பெறும் ஆழ்ந்த காற்றழுத்தப் பகுதி, மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகா்ந்து மற்றொரு புயலாக வலுப்பெற்று, இந்திய கடற்பகுதியைவிட்டு விலகி பாகிஸ்தான்-மக்ரான் நோக்கி மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர வாய்ப்புள்ளது.

அதன் காரணமாக குஜராத் கடலோர மாவட்டங்களான ஜாம்நகா், போா்பந்தா், துவாரகா, கட்ச் ஆகிய மாவட்டங்களில் 2 தினங்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனா் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வியாழக்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் ஜுனாகட், அம்ரேலி, துவாரகா, ஜாம்நகா், ராஜ்கோட் மாவட்டங்களில் கனமழை பதிவானது. ஜுனாகட் மாவட்டத்தின் விசாவதா் தாலுகாவில் 292 மி.மீ. மழை பதிவானது. அம்ரேலி மாவட்டம் லிலியாவில் 141 மி.மீ. மழை பதிவானது. துவாரகா மாவட்டம் கம்பாலியா, கல்யாண்பூா் பகுதிகளில் முறையே 140 மி.மீ. மற்றும் 135 மி.மீ. மழை பதிவாகின என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT