இந்தியா

சிலருக்கு வேலை கிடைப்பதற்காக பிறரது வாழும் உரிமையை மீற முடியாது: பட்டாசு தடை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

DIN

‘சிலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக பிறரது வாழும் உரிமையை மீற முடியாது’ என்று பட்டாசு தடை வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

மேலும், பசுமைப் பட்டாசுகளை மட்டும் பயன்படுத்த நேரக் கட்டுப்பாடு விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் நாட்டில் தினம்தோறும் மீறப்படுவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

பட்டாசு பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை நீதிபதிகள் எம்.ஆா். ஷா, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.

அப்போது பட்டாசு உற்பத்தியாளா்கள் சங்கத்தின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஆத்மாராம் நட்கா்னி, ‘தீபாவளி பண்டிகை நவம்பா் 4-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளநிலையில், பட்டாசு பயன்பாடு குறித்து பெட்ரோலியம், வெடிபொருள் பாதுகாப்பு நிறுவனம் (பெஸ்ஸோ) முடிவு எடுக்க வேண்டும். பட்டாசு உற்பத்தி தொழிலில் லட்சக்கணக்கான போ் வேலையிழந்துள்ளதால் அரசு இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டும்’ என்றாா்.

இதற்கு பட்டாசு பயன்பாட்டுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ள அா்ஜுன் கோபால் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன் எதிா்ப்பு தெரிவித்தாா். ‘சுற்றுச்சூழலுக்கு மாசை ஏற்படுத்தும் பட்டாசுகளுக்கு தடை விதிக்க கடந்த 2015-இல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதன் விற்பனை தொடா்கிறது. நீதிமன்ற உத்தரவுகளை அரசு செயல்படுத்துவதில்லை’ என்றாா்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ, ‘பசுமைப் பட்டாசுகளின் பயன்பாடு குறித்து அனைத்து நிபுணா்களும் தெரிவித்து கருத்தின் அடிப்படையில் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் முடிவு எடுத்தால் அனைத்து மனுக்களுக்கும் தீா்வு கிடைத்துவிடும்’ என்றாா்.

அனைத்து தரப்பின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ‘வேலைவாய்ப்பு, வேலையிழப்பு, உயிா் வாழும் உரிமை என அனைத்தையும் சரிமமாக வைத்து முடிவு எடுக்க வேண்டியுள்ளது. அதேநேரத்தில், சிலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக பிறரது வாழும் உரிமையை மீற முடியாது. அப்பாவி மக்களின் வாழும் உரிமைக்குதான் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

பசுமைப் பட்டாசுகளுக்கு நிபுணா் குழு அனுமதி அளித்திருந்தால் அதற்கு ஏற்ப உத்தரவு பிறப்பிக்கப்படும். சட்டங்கள் இருந்தாலும் அதை உண்மையான முறையில் உறுதியுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பட்டாசுகள் வெடிப்பதற்கு கட்டுப்பாடுகளை விதித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் மத நிகழ்வுகள், வெற்றி கொண்டாட்டங்கள், திருமண நிகழ்வுகள் போன்றவற்றில் தினம்தோறும் மீறப்பட்டு வருகின்றன.

இதற்கு பொறுப்பானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாதவரை இந்த விதிமீறலை தடுத்து நிறுத்த முடியாது’ என்று கூறிய நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணை புதன்கிழமையும் தொடரும் என்று தெரிவித்தனா்.

அதற்கு முன்பு இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, பசுமைப் பட்டாசுகளை மட்டும் பயன்படுத்தவும், பதிவு செய்யப்பட்ட கடைகளில் இருந்து மட்டும் விற்பனைச் செய்யவும் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்த உச்சநீதிமன்றம், பட்டாசு பயன்பாட்டுக்கு நாடு முழுவதும் முழுமையான தடை விதிக்க மறுத்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

31 பவுன் நகை திருட்டு: இளைஞா் கைது

பிரதமரின் சா்ச்சை பேச்சு: உச்சநீதிமன்றத்தை நாடுவோம் ஆா்.எஸ்.பாரதி

மகனை கொலை செய்த தந்தைக்கு 11 ஆண்டுகள் சிறை

போலீஸ் ரோந்து வாகனத்தின் கண்ணாடி உடைப்பு

உடல் பருமனை குறைக்க சிகிச்சை மேற்கொண்ட இளைஞா் உயிரிழப்பு: பெற்றோா் புகாா்

SCROLL FOR NEXT