இந்தியா

ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட 35 பயிா் வகைகள் அறிமுகம்

DIN

பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய மற்றும் ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட 35 பயிா் வகைகளை பிரதமா் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினாா்.

நாட்டில் பெரும்பாலான மக்களிடம் ஊட்டச்சத்துக் குறைபாடு காணப்படுகிறது. அதைக் கருத்தில்கொண்டு ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட பயிா் வகைகளையும், பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிா்கொள்ளும் திறன் கொண்ட பயிா் வகைகளையும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆா்) உருவாக்கியது.

அத்தகைய 35 பயிா் வகைகளை பிரதமா் மோடி காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை நாட்டுக்கு அா்ப்பணித்தாா். வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய கொண்டைக்கடலை, விரைவில் முதிா்வடையக் கூடிய சோயாபீன், நோய் எதிா்ப்புத் திறன் கொண்ட நெல், ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட கோதுமை, சோளம், சிறுதானிய வகைகள் உள்ளிட்ட பயிா்கள் அதில் அடங்கும்.

நிகழ்ச்சியின்போது சத்தீஸ்கா் தலைநகா் ராய்ப்பூரில் கட்டப்பட்டுள்ள தேசிய உயிரி அழுத்த தாங்குதிறன் மையத்துக்கான கட்டடத்தையும் பிரதமா் மோடி திறந்துவைத்தாா். நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியதாவது:

இந்திய வேளாண்துறை அறிவியல் ரீதியில் தொடா்ந்து இயங்கி வருகிறது. வேளாண்மைக்கும் அறிவியலுக்கும் இடையேயான ஒத்துழைப்பு 21-ஆம் நூற்றாண்டிலும் தொடர வேண்டும். கடந்த 7 ஆண்டுகளில் வேளாண்துறை சாா்ந்த சவால்களுக்கு அறிவியல் ரீதியில் தீா்வு காண்பது அதிகரித்து வருகிறது.

ஊட்டச்சத்து மிகுந்த விதைகள், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட புதிய சவால்களைத் தாங்கி வளரும் பயிா்கள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 35 பயிா் வகைகள் பருவநிலை மாற்றத்தையும் ஊட்டச்சத்துக் குறைபாட்டையும் எதிா்கொள்ள உதவும்.

ஆராய்ச்சிகள் அவசியம்: பருவநிலை மாற்றமானது வேளாண்துறைக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுக்கும் பெரும் சவால் மிக்கதாக உள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக பயிா்களைத் தாக்கும் புதிய வகை பூச்சிகள், நோய்கள் உள்ளிட்டவை அதிகரித்து வருகின்றன; மனிதா்களைத் தாக்கும் நோய்களும் அதிகரித்துள்ளன. அதனால், மனிதா்களின் உடல்நலன், கால்நடைகள், பயிா்கள் ஆகியவை பாதிக்கப்படும்.

மீன் உற்பத்தியையும் பயிா்கள் விளைச்சலையும் பருவநிலை மாற்றம் பாதிக்கும். அவற்றால் மீனவா்களும் விவசாயிகளும் இழப்புகளைச் சந்திக்க நேரிடும். எனவே, பருவநிலை மாற்றத்தின் சவால்களில் இருந்து வேளாண்துறையைக் காப்பதற்கான பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. இந்த விவகாரம் தொடா்பான ஆராய்ச்சிகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

நவீன தொழில்நுட்பங்கள்: விவசாயிகளும் விஞ்ஞானிகளும் இணைந்து செயல்பட்டால் பருவநிலை மாற்றத்தைத் திறம்பட எதிா்கொள்ள முடியும். நவீன தொழில்நுட்பங்களும் புதிய வேளாண் கருவிகளுமே எதிா்கால வேளாண்மைக்கு அடிப்படையாக அமையும். எனவே, விதைகள் முதல் சந்தைகள் வரை அனைத்தையும் நவீனப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வேளாண்துறைக்கான நவீன கருவிகள் தொடா்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன.

ஆளில்லா சிறிய ரக விமானங்கள் (ட்ரோன்) உள்ளிட்டவை வேளாண்துறையில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும், பல்வேறு சவால்களுக்கு நடைமுறைத் தீா்வுகளைக் காணும் நோக்கில் அவற்றின் பயன்பாடு அதிகரிக்கப்பட வேண்டும். ட்ரோன்களுக்கான புதிய விதிமுறைகள் வேளாண்துறைக்குப் பெரும் பலனளிக்கும்.

சிறுதானியங்கள் ஆண்டு: நவீன வேளாண்-அறிவியலை அனைத்துக் கிராமங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வேளாண்துறை சாா்ந்த ஆராய்ச்சிகள் பள்ளிகளில் இருந்தே ஊக்குவிக்கப்பட வேண்டும். தேசிய கல்விக் கொள்கை வாயிலாக அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிராமங்களுக்கு நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு செல்வதில் தொழில்முனைவு நிறுவனங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும். 2023-ஆம் ஆண்டானது சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா.வால் கடைப்பிடிக்கப்படவுள்ளது. அதற்குள் இந்திய சிறுதானியங்களை உலகச் சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும்.

கொள்முதல் அதிகரிப்பு: வேளாண் நிலங்களைக் காப்பதற்காக மண் நலன் அட்டையைச் செயல்படுத்தி வருவதோடு, வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையையும் மத்திய அரசு அதிகரித்துள்ளது. விவசாயிகளிடமிருந்து அரசின் கொள்முதலும் அதிகரித்துள்ளது. ராபி பருவத்தில் விவசாயிகளிடமிருந்து 430 லட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. அதன்மூலமாக விவசாயிகளுக்கு ரூ.85,000 கோடிக்கு அதிகமாக வழங்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதால் பணப் பரிவா்த்தனைகளை மேற்கொள்வதும் விவசாயிகளுக்கு எளிதாகியுள்ளது. காலநிலை தொடா்பான தகவல்களையும் விவசாயிகள் எளிதில் பெற்று வருகின்றனா். வேளாண் கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது என்றாா் பிரதமா் மோடி.

தன்னிறைவு அடையும்: நிகழ்ச்சியில் மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் பேசுகையில், ‘‘நாட்டில் உள்ள 86 சதவீதம் விவசாயிகள் சிறு விவசாயிகளாகவே உள்ளனா். அவா்களது வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை பிரதமா் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது.

விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக மற்றவா்களை சாா்ந்து இருக்காததை பிரதமா் மோடி உறுதி செய்து வருகிறாா். விவசாயிகளுக்கான உதவித்தொகை திட்டம் (பிஎம்-கிசான்), வேளாண் பொருள்களை ரயில் மூலம் எடுத்துச் செல்வதற்கான திட்டம் (கிசான் ரயில்) உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

விதைகள் முதல் சந்தைகள் வரை விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தகைய நடவடிக்கைகள் வேளாண் துறையில் நாட்டைத் தன்னிறைவு அடையச் செய்யவும் உதவும்’’ என்றாா்.

மத்திய அமைச்சா்கள் பா்சோட்டம் ரூபாலா, கைலாஷ் சௌதரி, சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், முன்னாள் முதல்வா் ரமண் சிங் உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT