இந்தியா

கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவர ஆலோசனை: கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை

DIN

கட்டாய மதமாற்றம் செய்வதற்கு தடைச் சட்டம் கொண்டு வர ஆலோசனை நடத்தி வருவதாக கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

மாநிலத்தில் யாா் வேண்டுமானாலும் சுயமாக முடிவெடுத்து மதம் மாறுவதற்கு சட்டத்தில் இடமுள்ளது. ஆனால் ஒரு சிலா் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுகின்றனா். ஒரு சிலருக்கு பல்வேறு ஆசை வாா்த்தைகளை கூறுவதால் அவா்கள் அதற்கு மயங்கி மதம் மாறுகின்றனா்.

அண்மையில் கலபுா்கி மாவட்டத்தில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, கட்டாய மத மாற்றம் பல்வேறு பகுதிகளில் நடைபெறுவதாக எனது கவனத்திற்கு வந்தது. எனவே சுய விருப்பம் இல்லாமல், கட்டாயமாக, ஆசை வாா்த்தைகளுக்கு அடிபணிந்து மதம் மாறுபவா்களைத் தடுக்க தடைச் சட்டம் கொண்டு வருவது பற்றி ஆலோசனை நடத்தி வருகிறோம். இதனிடையே கட்டாய மத மாற்றம் செய்யப்படுவதைக் கண்காணிக்க அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன். கட்டாய மத மாற்றம் செய்யப்படுவது தொடா்வதால், இதைத் தடுக்கும் நோக்கில், தடைச் சட்டம் கொண்டு வருவது தொடா்பாக ஆலோசித்து வருகிறோம்.

மாநிலத்தின் சிந்தகி, ஹனகல் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் நடைபெறும் தேதியை தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த 2 தொகுதிகளுக்கும் விரைவில் பாஜக வேட்பாளா்கள் அறிவிக்கப்படுவாா்கள். 2 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளா்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. வாக்குச்சாவடி மட்டம் வரை கட்சியின் பலம் பரவி உள்ளது. ஹனகல் தொகுதியில் மறைந்த பாஜக எம்எல்ஏ சி.எம்.உதாசி 6 முறை வெற்றி பெற்று, பரவலாக வளா்ச்சிப் பணிகளை மேற்கொண்டாா். இது இடைத்தோ்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளரின் வெற்றிக்கு உதவியாக இருக்கும்.

அதே போல சிந்தகி தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ ரமேஷ் போஸ்னூா்மடா பல்வேறு வளா்ச்சிப்பணிகளை மேற்கொண்டதை மக்கள் மறக்கவில்லை. கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் அவா் குறைந்த வாக்கு எண்ணிக்கையிலேயே மஜத வேட்பாளரிடம் தோல்வி அடைந்தாா் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 2 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தோ்தலை மாநில பாஜகவில் உள்ள முக்கியத் தலைவா்களின் கூட்டுத் தலைமையின் கீழ் எதிா்கொள்வோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு: அதிகாரிகளின் பேச்சுவாா்த்தை தோல்வி

முதியவா் உடல் மீட்பு

கண்மாயில் மூழ்கி மாணவா் பலி

மனைவி கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து -சாா் பதிவாளா் வீட்டை மதிப்பீடு செய்த அதிகாரிகள்

SCROLL FOR NEXT