இந்தியா

கரோனா நிலவரத்தை இந்தியா சிறப்பான முறையில் கையாண்டுள்ளது: அமித் ஷா

DIN

குறைவான வளங்களே இருந்தபோதிலும் அனைத்து நாடுகளைக் காட்டிலும் இந்தியா கரோனா நிலவரத்தை சிறப்பாகக் கையாண்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
 தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ) உருவாக்கப்பட்டதன் 17-ஆவது ஆண்டு தினத்தையொட்டி தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியது:
 எந்தவித பேரிடர் ஏற்பட்டாலும் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை அனைத்து மக்களும் அறிந்திருக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்குப் பயிற்சி அளிக்க ஆப்த மித்ரா (பேரிடர் நண்பர்கள்) என்ற திட்டத்தை 350 மாவட்டங்களில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக 25 மாநிலங்களில் உள்ள 30 மாவட்டங்களில் வெற்றிகரமாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
 பேரிடர் ஏற்படும்போது முதலில் அதை எவ்வாறு சமாளிப்பது என்பதும் குறித்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு உதவி செய்வது, மீட்பது என்பது குறித்தும் மக்களுக்கு இத்திட்டத்தின்கீழ் பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டத்தின்கீழ் காப்பீடும் வழங்கப்படும். இது தொடர்பாக 28 மாநில அரசுகளுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
 குறைவான வளங்களும், 130 கோடி என்ற மக்கள்தொகையும் இருந்தபோதிலும் அனைத்து நாடுகளைக் காட்டிலும் இந்தியா கரோனா நிலவரத்தை சிறப்பாகக் கையாண்டுள்ளது. இது தொடர்பாக நடுநிலையான ஓர் அமைப்பு ஆய்வு நடத்தினால், கரோனா தொற்றை எதிர்த்துப் போரிட்டதிலும், இறப்பு விகிதத்தைக் குறைத்ததிலும் நம் நாடு சிறப்பாகச் செயல்பட்டது தெரிய வரும்.
 கரோனா பரவலைச் சமாளிப்பதில் பல்வேறு நாடுகள் மிகவும் சிரமமான காலகட்டத்தை எதிர்கொண்டன. தொற்று பரவல் காலகட்டத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பணி பாராட்டுக்குரியதாக இருந்தது. கரோனா பரவல் காலகட்டத்தில் நாட்டின் சில பகுதிகளில் புயல் வீசியது. அப்போது சிறப்பாகத் திட்டமிட்டு தயார்நிலையில் இருந்ததால் நாட்டில் ஆக்சிஜன் ஆலை ஒன்றுகூட சேதமடையவில்லை. அதேபோல புயல் வீசிய பகுதிகளில் ஆக்சிஜன் ஆலைகளிலும் மருத்துவமனைகளிலும் மின்சார விநியோகம் தடைபடவில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் சிறப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டோம்.
 எந்தப் பேரிடரின்போதும் உயிரிழப்புகளே ஏற்படக் கூடாது என்பதே அரசின் அணுகுமுறையாக உள்ளது. அது பெருமளவுக்கு வெற்றி பெற்றுள்ளது. ஒடிஸா மாநிலத்தில் கடந்த 1999-இல் வீசிய சூப்பர் புயலின்போது சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர். ஆனால் நடப்பு ஆண்டில் இதுவரை வீசிய மூன்று புயல்களின்போது 50 பேர் இறந்தனர். 50 பேர் இறந்ததும் ஏற்கத்தக்கது அல்ல; எனவே எந்தப் பேரிடரின்போதும் இறப்புகளே இல்லாத நிலையை நாம் இலக்காகக் கொள்ள வேண்டும்.
 பேரிடர்கள் தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் முழு கட்டமைப்பு அமலுக்கு வந்தால் ஏராளமான உயிர்கள் காக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

SCROLL FOR NEXT