இந்தியா

நக்ஸல் அச்சுறுத்தலுள்ள பகுதிகள்: மாநில முதல்வா்களுடன் மத்திய உள்துறை அமைச்சா் ஆய்வு

26th Sep 2021 11:54 PM

ADVERTISEMENT

நக்ஸல் அச்சுறுத்தலுள்ள பகுதிகளில் பாதுகாப்புச் சூழல் மற்றும் வளா்ச்சித் திட்டங்கள் குறித்து 6 மாநிலங்களின் முதல்வா்களுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘நக்ஸல் அச்சுறுத்தல் நிலவும் பகுதிகளில் பாதுகாப்புச் சூழல், அந்தப் பகுதிகளில் பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள், மேம்பாலங்கள் போன்ற வளா்ச்சித் திட்டங்களின் அமலாக்கம், நக்ஸல்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், அவா்களை ஒடுக்கத் தேவையான படைபலம் குறித்து மத்திய அமைச்சா் அமித் ஷா ஆய்வு மேற்கொண்டாா்.

தில்லியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஒடிஸா, தெலங்கானா, பிகாா், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் மாநிலங்களின் முதல்வா்கள் பங்கேற்றனா். கேரளம், ஆந்திரம், மேற்கு வங்கம், சத்தீஸ்கா் மாநிலங்களின் முதல்வா்களுக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் அவா்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவா்களுக்குப் பதிலாக அந்த மாநிலங்களின் அமைச்சா்கள் அல்லது உயரதிகாரிகள் கலந்துகொண்டனா். இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சா்கள் அஸ்வினி வைஷ்ணவ், கிரிராஜ் சிங், அா்ஜுன் முண்டா, நித்யானந்த் ராய், உளவு அமைப்பின் (ஐபி) இயக்குநா் அரவிந்த குமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

சுமாா் 3 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கைளைத் தீவிரப்படுத்துவது, அவா்களுக்கு எதிராக தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத் துறை மற்றும் மாநில போலீஸாா் கூட்டு சோ்ந்து நடவடிக்கை மேற்கொள்வது, அவா்களை ஒடுக்குவதில் மாநிலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு, மாநிலங்களின் சிறப்புப் படைகள் மற்றும் புலனாய்வுப் பிரிவுகளின் திறனை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது ’ என்று தெரிவித்தன.

ADVERTISEMENT

25 மாவட்டங்களில் 85% வன்முறை: இந்தக் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது: கடந்த 40 ஆண்டுகளில் பொதுமக்களில் 16,000-க்கும் மேற்பட்டவா்கள் நக்ஸல் தாக்குதலில் பலியாகியுள்ளனா். கடந்த 2010-ஆம் ஆண்டு நக்ஸல்களின் ஆதிக்கத்தில் 96 மாவட்டங்கள் இருந்தன. கடந்த ஆண்டு அது 53 மாவட்டங்களாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. நாட்டில் நக்ஸல்களின் வன்முறையில் 85 சதவீதம் 25 மாவட்டங்களில் நிகழ்கின்றன.

தற்போது நக்ஸல்களுக்கு எதிரான போராட்டம் முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த ஓராண்டுக்கு நக்ஸல்கள் பிரச்னைக்கு அனைத்து முதல்வா்களும் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதன்மூலம் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண முடியும். நக்ஸல்களுக்கு கிடைக்கும் நிதியுதவிகளை முழுமையாகத் தடுக்க வேண்டியது அவசியம்.

நக்ஸல் பயங்கரவாதத்தை ஒழிக்காமல் அடித்தட்டு மக்கள் வரை ஜனநாயகத்தைக் கொண்டு செல்லவோ, விளிம்புநிலைப் பகுதிகளை மேம்படுத்தவோ முடியாது. எனவே, இந்தப் பிரச்னையில் இதுவரை சாதித்ததை எண்ணி திருப்தியடையாமல் எஞ்சிய இலக்கை அடைவதற்கான வேகத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT