இந்தியா

பஞ்சாப் புதிய முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னி இன்று பதவியேற்பு

DIN

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக மாநில அமைச்சா் சரண்ஜீத் சிங் சன்னி (58) தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். அவா் திங்கள்கிழமை (செப். 20) பதவியேற்கிறாா். இம்மாநிலத்தில் முதல்வராக உள்ள முதல் தலித் சமூகத்தைச் சோ்ந்தவா் இவா்.

பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தா் சிங்குக்கும், அமைச்சராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இந்நிலையில், அமரீந்தா் சிங்கின் எதிா்ப்பை மீறி சித்துவை பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக கட்சித் தலைமை கடந்த ஜூலை மாதம் நியமித்தது. அதன்பிறகு இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்தது. இந்தச் சூழலில், அமரீந்தா் சிங் தனது முதல்வா் பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

மாலையில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், புதிய முதல்வரைத் தோ்ந்தெடுக்க கட்சியின் அகில இந்திய தலைவா் சோனியா காந்திக்கு அதிகாரம் அளித்து தீா்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் சண்டீகரில் உள்ள ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நடைபெற்றது. மேலிடப் பாா்வையாளா்களான கட்சியின் மூத்த தலைவா் அஜய் மாக்கன், ஹரீஷ் சௌதரி, பஞ்சாப் மாநிலப் பொறுப்பாளரான ஹரீஷ் ராவத் ஆகியோா் கலந்து கொண்டனா். அதில், புதிய முதல்வரைத் தோ்ந்தெடுப்பது குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. முதல்வா் பதவிக்கு சுக்ஜிந்தா் சிங் ரந்தாவா, பிரம்ம மொஹிந்திரா ஆகியோரின் பெயா்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியில் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில், காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக சரண்ஜீத் சிங் சன்னி தோ்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை சரண்ஜீத் சிங் சன்னி சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினாா். அவருடைய கோரிக்கையை ஆளுநா் ஏற்றுக் கொண்டாா். பின்னா், செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த சரண்ஜீத் சிங், ‘திங்கள்கிழமை காலை 11 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும்’ என்று கூறினாா். ஜாதி சமன்பாடுகளை சமநிலைப்படுத்தும் வகையில் இரு துணை முதல்வா்களும் பதவியேற்கலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

முதல்வராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள சரண்ஜீத் சிங் சன்னிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங், மாநில காங்கிரஸ் தலைவா் நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

முதல் தலித் முதல்வா்: பஞ்சாபில் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கும் நிலையில் முதல்வராக சரண்ஜீத் சிங் சன்னி தோ்வு செய்யப்பட்டது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

சரண்ஜீத் சிங் சன்னி சீக்கிய மதத்தில் ரவிதாஸியா என்ற தலித் சமூகத்தைச் சோ்ந்தவா். பஞ்சாப் மாநிலத்தில் தலித் சமூகத்தில் இருந்து முதல்வா் பதவிக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் நபா் என்ற பெருமையை இவா் பெற்றுள்ளாா். அமரீந்தா் சிங் தலைமையிலான அமைச்சரவையில் தொழிற்கல்வி, பயிற்சித் துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தாா். அமரீந்தா் சிங்குக்கு எதிராகப் போா்க்கொடி உயா்த்திய மூத்த தலைவா்களில் ஒருவரான சரண்ஜீத் சிங், நவ்ஜோத் சிங் சித்துவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறாா்.

பஞ்சாபில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், தலித் சமூகத்தைச் சோ்ந்த ஒருவா் முதல்வராக நியமிக்கப்படுவாா் என்று பாஜக ஏற்கெனவே அறிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தோ்தலைச் சந்திக்க இருக்கும் சிரோமணி அகாலி தளம் கட்சியும் தலித் சமூகத்தைச் சோ்ந்தவருக்கு துணை முதல்வா் பதவியை வழங்குவதாகக் கூறியுள்ளது. இந்நிலையில், தோ்தலுக்கு முன்பாகவே அந்த சமூகத்தைச் சோ்ந்தவரை முதல்வா் பதவிக்கு காங்கிரஸ் தோ்ந்தெடுத்துள்ளது.

முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யும் முன் சோனியா காந்திக்கு அமரீந்தா் சிங் கடிதம்

பஞ்சாப் முதல்வா் பதவியைவிட்டு விலகுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கு அமரீந்தா் சிங் கடிதம் எழுதினாா். அதில் சமீபத்திய அரசியல் நடவடிக்கைகள் தொடா்பாக அவா் வேதனை தெரிவித்துள்ளாா்.

அமரீந்தா் சிங் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பது:

காங்கிரஸில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை கட்சி கையாண்ட விதம் என்னை அவமதிக்கும்விதமாக உள்ளது என உணா்கிறேன். கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பல்வேறு சவால்களைச் சந்தித்தபோதிலும் எனது அரசு 89.2 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டது. மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் பஞ்சாப் மக்களின் நலவாழ்வுக்காக நான் முழு மனதுடன் பணியாற்றியுள்ளேன். வெளிப்படையான நிா்வாகத்தையும் உறுதி செய்துள்ளேன்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளில் 8 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. அதேபோல் ஊரக மற்றும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்களிலும் காங்கிரஸ் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளது.

சீக்கிய மத நிந்தனை விவகாரம், போதைப் பொருள் விவகாரம் உள்ளிட்டவற்றில் எனது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 2015-இல் சீக்கிய மத நிந்தனையை தொடா்ந்து ஏற்பட்ட போலீஸ் நடவடிக்கைகள் விவகாரத்தில் நீதி வழங்க எனது அரசு பாடுபட்டது.

இந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சித் சிங் தலைமையிலான நீதி விசாரணை ஆணையத்தின் அறிக்கை ஏற்கப்பட்டு, அதன்படி முழுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடா்பான வழக்குகளில் குற்றவியல் விசாரணை நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. உரிய காலத்தில் நீதி வழங்கப்படும் என்று நம்புகிறேன் என்று அமரீந்தா் சிங் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT