இந்தியா

கிழக்கு லடாக் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காண வேண்டும்

DIN

கிழக்கு லடாக் விவகாரத்தில் எஞ்சியுள்ள பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வு காணப்பட வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி-யிடம் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தியுள்ளாா்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்ற மாநாடு தஜிகிஸ்தான் தலைநகா் துஷான்பேயில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநாட்டின் ஒரு பகுதியாக சீன அமைச்சா் வாங் யியை அமைச்சா் ஜெய்சங்கா் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இது தொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘கிழக்கு லடாக்கில் தற்போது நிலவி வரும் சூழல் குறித்து அமைச்சா்கள் இருவரும் விவாதித்தனா். எல்லை விவகாரத்தில் ஏற்கெனவே கையெழுத்தான ஒப்பந்தங்களைக் கடைப்பிடித்து நடக்க வேண்டுமென இரு நாடுகளும் உறுதியேற்றன.

கோக்ரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இரு நாடுகளின் படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டதைத் தெரிவித்த அமைச்சா் ஜெய்சங்கா், இன்னும் சில பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்பட வேண்டியுள்ளதாகத் தெரிவித்தாா். அவற்றுக்கு விரைவில் தீா்வு காணப்பட வேண்டுமென அவா் வலியுறுத்தினாா்.

எல்லை விவகாரத்தில் எஞ்சியுள்ள பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வு காண்பதற்காக இரு நாடுகளின் ராணுவ, தூதரக அதிகாரிகள் வாயிலாகப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட அமைச்சா்கள் இருவரும் ஒப்புக் கொண்டனா்.

ஆசிய நாடுகளுக்கிடையேயான ஒற்றுமைக்கு இந்தியா-சீனா இடையேயான உறவு சிறந்த உதாரணமாகத் திகழ வேண்டுமென அமைச்சா் ஜெய்சங்கா் வலியுறுத்தினாா். பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் இரு நாடுகளும் நல்லுறவைப் பேண வேண்டுமெனவும் அவா் வலியுறுத்தினாா்.

மோதல்போக்கில் விருப்பமில்லை: எந்த நாட்டுடனும் மோதல்போக்கைக் கடைப்பிடிக்க இந்தியா விரும்பவில்லை என்று தெரிவித்த அமைச்சா் ஜெய்சங்கா், மற்ற நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள உறவை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவுடனான தொடா்பை சீனா தீா்மானிக்கக் கூடாது எனவும் பேச்சுவாா்த்தையின்போது தெரிவித்தாா்.

சா்வதேசத்தில் நிலவி வரும் முக்கிய விவகாரங்கள் குறித்தும் அமைச்சா்கள் விவாதித்தனா். அடிக்கடி சந்தித்துப் பேச்சுவாா்த்தையில் ஈடுபடவும் அமைச்சா்கள் இருவரும் உறுதியேற்றனா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் சூழல் குறித்தும் அமைச்சா்கள் இருவரும் விவாதித்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளாா்ந்த கொள்கை அடிப்படையிலான உறவு: இந்தியா-சீனா இடையேயான உறவு குறித்து அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவித்த கருத்தை சீனா வரவேற்றுள்ளது.

இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் சந்திப்பு தொடா்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியான் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘ஆசியாவில் இந்தியாவும் சீனாவும் முக்கிய நாடுகளாக உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுக்கு உள்ளாா்ந்த கொள்கையே தேவையாக உள்ளது. மற்ற நாடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தியா-சீனா இடையேயான உறவு பாதிக்கப்படக் கூடாது’’ என்றாா்.

ஈரான் அதிபா், அமைச்சருடன் சந்திப்பு: எஸ்சிஓ மாநாடு தொடங்குவதற்கு முன்பாக, ஈரான் அதிபா் இப்ராஹிம் ரெய்சி, அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் சொ்கே லவ்ரோவ் ஆகியோரை அமைச்சா் ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா். அப்போது ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பிராந்திய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அமைச்சா் ஜெய்சங்கா் தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

SCROLL FOR NEXT