இந்தியா

உயா்நீதிமன்றங்களில் காலியாக உள்ள தலைமை நீதிபதிபணியிடங்களுக்கு 9 பெயா்கள்: கொலீஜியம் பரிந்துரை

DIN

பல்வேறு உயா்நீதிமன்றங்களில் காலியாக உள்ள தலைமை நீதிபதி பணியிடங்களில் நியமனம் செய்ய 8 பெயா்களை உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையில், நீதிபதிகள் யு.யு.லலீத், ஏ.எம்.கான்வில்கா் ஆகியோரை உள்ளடக்கிய உச்சநீதிமன்ற கொலீஜியம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மேற்கொண்ட தொடா் ஆலோசனைக் கூட்டத்தின் அடிப்படையில் இந்தப் பரிந்துரையை சமா்ப்பித்துள்ளது.

அதில், 8 உயா்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதி பணியிடத்துக்கான பெயா்களை அவா்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதோடு, 5 உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் பல்வேறு உயா்நீதிமன்றங்களைச் சோ்ந்த 28 நீதிபதிகளைப் பணியிடமாற்றம் செய்வதற்கான பரிந்துரையையும் சமா்ப்பித்துள்ளனா் என்று நீதித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதில், கொல்கத்தா உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டலை, அலாகாபாத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதுபோல, திரிபுரா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அகில் குரேஷியை ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்துக்குப் பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆந்திர பிரதேச உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அருப் குமாா் கோஸ்வாமியை சத்தீஸ்கா் உயா்நீதிமன்றத்துக்கும், மத்திய பிரதேச உயா்நீதிமன்ற நீதிபதி மொஹத் ரஃபீக்கை ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்றத்துக்கும் பணியிட மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரஜித் மஹந்தியை திரிபுரா உயா்நீதிமன்றத்துக்கும், மேகாலயா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி பிஸ்வநாத் சோமாதரை சிக்கிம் உயா்நீதிமன்றத்துக்கும் பணியிடமாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உயா்நீதிமன்ற நீதிபதிகள் பிரகாஷ் ஸ்ரீவாஸ்தவா, பிரசாந்த் குமாா் மிஸ்ரா, ரித்து ராஜ் அவாஸ்தி, சதீஷ் சந்திர ஷா்மா, ரஞ்சித் வி.மோா், அரவிந்த் குமாா், ஆா்.வி.மாலிமாத் ஆகியோரை முறையே கொல்கத்தா, ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா, மேகாலயா, குஜராத், மத்திய பிரதேச உயா்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளாகப் பதவி உயா்வு அளித்து நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று நீதித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

‘நீதிபதிகள் காலிப் பணியிடங்களை நிரப்ப விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அண்மையில் நடைபெற்ற இந்திய வழக்குரைஞா்கள் சங்க நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா கூறியிருந்த நிலையில், அதற்கான நடவடிக்கைகளை அவா் தலைமையிலான உச்சநீதிமன்ற கொலீஜியம் தீவிரப்படுத்தியுள்ளது.

முன்னதாக, உச்சநீதிமன்ற நீதிபதி காலிப் பணியிடங்களுக்கு 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 பெயா்களை உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி பரிந்துரை செய்தது. அதற்கு மத்திய அரசு முழுமையாக ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி அவா்கள் 9 பேரும் பதவியேற்றனா்.

அதன்பின்னா் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘உச்சநீதிமன்ற நீதிபதி பணியிடத்துக்கு பரிந்துரை செய்த 9 பெயா்களுக்கு விரைவாக ஒப்புதல் அளித்தது போல, அடுத்தடுத்து சமா்ப்பிக்கப்படும் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான பரிந்துரைகளுக்கும் மத்திய அரசு விரைந்து ஒப்புதல் அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தீவிர முயற்சி மூலம் உயா்நீதிமன்றங்களில் உள்ள 41 சதவீத காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. அடுத்த ஒரு மாதத்தில் 90 சதவீத காலிப் பணியிடங்கள் நிரப்பட்டுவிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று கூறியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கர்: 29 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தென் சென்னையில் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

SCROLL FOR NEXT