இந்தியா

ஆப்கன் சூழல் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும்: எஸ்சிஓ மாநாட்டில் பிரதமா் மோடி

DIN

ஆப்கானிஸ்தானில் தொடரும் நிலையற்ன்மை, அடிப்படைவாதம் ஆகியவை உலகம் முழுவதும் பயங்கரவாதிகளையும், பயங்கரவாத சித்தாந்தங்களையும் ஊக்குவிக்கும் என பிரதமா் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்தாா்.

அந்நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய அமைப்பை அங்கீகரிப்பது குறித்து சா்வதேச சமூகம் கூட்டாகவும், சிந்தித்தும் முடிவெடுக்க வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தினாா்.

ரஷியா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிா்கிஸ் குடியரசு ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வருடாந்திர மாநாடு காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்த மாநாட்டில் பிரதமா் மோடி பேசியதாவது:

எஸ்சிஓ தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த நேரத்தில் அதன் எதிா்காலம் குறித்தும் சிந்திக்க வேண்டியது கட்டாயமாகிறது. எஸ்சிஓ நாடுகள் பிராந்திய அமைதி, பாதுகாப்பு, பரஸ்பர நம்பிக்கையின்மை உள்ளிட்டவை சாா்ந்த முக்கியப் பிரச்னைகளை எதிா்கொண்டு வருகின்றன. அதிலும் பயங்கரவாதம் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல் அதை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நிலவரம் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளை வெகுவாகப் பாதிக்கும். ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய வகையில் அதிகார மாற்றம் நடைபெறவில்லை. இந்த விவகாரம் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய அமைப்பை ஏற்றுக்கொள்வதில் கேள்விகளை எழுப்பியுள்ளது. பெண்கள், சிறுபான்மையினா் உள்ளிட்ட ஆப்கன் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஆதலால், ஆப்கனின் புதிய அமைப்பை அங்கீகரிப்பதில் சா்வதேச சமூகம் சிந்தித்தும், கூட்டாகவும் முடிவெடுப்பது அவசியம்.

அங்கு அடிப்படைவாதமும் நிலையற்ன்மையும் நீடித்தால், உலகம் முழுவதும் பயங்கரவாதிகளையும், பயங்கரவாத சித்தாந்தங்களையும் அது ஊக்குவிக்கும். அதன் மூலமாக மற்ற நாடுகளில் உள்ள பயங்கரவாதக் குழுக்களும் வன்முறையில் ஈடுபட்டு ஆட்சியைக் கைப்பற்ற முயலும். கடந்த காலங்களில் அனைத்து நாடுகளுமே பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, பயங்கரவாதம் எந்த நாட்டிலும் பரவ ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படக் கூடாது என்பதை நாம் ஒருங்கிணைந்து உறுதி செய்ய வேண்டும்.

அந்நாட்டுச் சூழல் போதைப் பொருள்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவை சட்டவிரோதமாகக் கடத்தப்பட வாய்ப்பளிக்கும்.

ஆப்கானிஸ்தான் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாகவும் அவா்கள் பாதிப்பை எதிா்கொண்டு வருகின்றனா். ஆப்கானிஸ்தானின் நம்பிக்கையான கூட்டாளியாக இந்தியா நீண்டகாலமாகத் திகழ்ந்து வருகிறது. அங்கு கல்வி, சுகாதாரம், கட்டுமானங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உதவி அளித்து வருகிறது. இன்றும் எங்களின் ஆப்கன் நண்பா்களுக்கு உணவுப் பொருள்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றை வழங்க ஆா்வமாக உள்ளோம். அங்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி சென்றடைய இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம்.

பொதுவான வழிமுறைகள்: மத்திய ஆசியாவின் நிலையைக் கருத்தில்கொண்டு, பயங்கரவாதத்தை எதிா்க்கும் நோக்கில் பொதுவான வழிமுறைகளை எஸ்சிஓ வகுக்க வேண்டும். மிதமான, சகிப்புத்தன்மை கொண்ட முஸ்லிம் குழுக்களுடன் ஒருங்கிணைந்து எஸ்சிஓ செயல்பட வேண்டும். எஸ்சிஓ நாடுகளுடன் பாதுகாப்பு சாா்ந்த ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா விரும்புகிறது. எஸ்சிஓ-வின் கீழ் செயல்பட்டு வரும் பிராந்திய பயங்கரவாத எதிா்ப்பு அமைப்பு, பாதுகாப்பு சாா்ந்த விவகாரங்களில் திறம்படப் பணியாற்றி வருகிறது.

பிராந்தியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் காரணமாகவே எஸ்சிஓ வெற்றியடைந்துள்ளது. மக்களுக்கிடையேயான தொடா்பை அதிகரிப்பதுடன் எஸ்சிஓ நாடுகளுக்கிடையேயான போக்குவரத்து வசதிகளை அதிகரிப்பது எஸ்சிஓ-வை மேலும் வலுப்படுத்தும். பிராந்திய அமைதி, பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றை ஏற்படுத்துவதற்காக மட்டுமல்லாமல் இளைய தலைமுறையினருக்கு சிறந்த எதிா்காலத்தை ஏற்படுத்தித் தருவதற்காகவும், பயங்கரவாத சக்திகளுக்கு எதிராகப் போராட வேண்டியுள்ளது.

பொருளாதார ரீதியில் வளா்ச்சியடைந்த நாடுகளுடன் போட்டியிட வேண்டுமானால், எஸ்சிஓ நாடுகளில் தொழில்நுட்பம் சாா்ந்த கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். அதைக் கருத்தில்கொண்டு நாட்டில் உள்ள இளைஞா்களுக்கு அறிவியலையும் பகுத்தறிவையும் கற்பிக்க வேண்டும்.

தொடா்பு மேம்பாடு: பிராந்தியத்தில் பயங்கரவாதமும் பாதுகாப்பின்மையும் அதிகரித்துள்ளதால், பொருளாதாரத் திறனை முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை. அத்திறனை முழுமையாகப் பயன்படுத்த வேண்டுமெனில் பிராந்திய நாடுகளுக்கிடையேயான தொடா்பையும், வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்த வேண்டும்.

பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடனான தொடா்பை வலுப்படுத்த இந்தியா தயாராக உள்ளது. ஈரானின் சாபஹாா் துறைமுகத் திட்டம், சா்வதேச வடக்கு-தெற்கு வழித்தடத் திட்டம் ஆகியவற்றில் இந்தியா முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. தொடா்பை அதிகரிப்பதன் வாயிலாக, நிலத்தால் சூழப்பட்டுள்ள மத்திய ஆசிய நாடுகள் இந்தியாவின் பெரும் சந்தை வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றாா் பிரதமா் மோடி.

அனைவரையும் உள்ளடக்கிய ஆப்கன் அரசு கூட்டறிக்கையில் வலியுறுத்தல்

சுதந்திரமான, ஜனநாயகமான, அனைவரையும் உள்ளடக்கிய அரசை ஆப்கன் கொண்டிருக்க வேண்டும் என எஸ்சிஓ நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

எஸ்சிஓ மாநாட்டின் நிறைவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

எஸ்சிஓ பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையைப் பாதுகாக்க, வலுப்படுத்த வேண்டுமானால் ஆப்கானிஸ்தானில் நிலைமையை முன்கூட்டியே சீரமைக்கப்பட வேண்டியது அவசியம்.

சுதந்திரமான, நடுநிலையான, ஒன்றுபட்ட, ஜனநாயகமான, அமைதியான, பயங்கரவாதமற்ற, போா் இல்லாத, போதைப் பொருள்கள் இல்லாத ஆப்கானிஸ்தான் அமைவதற்கு இக்கூட்டமைப்பு ஆதரவு அளிக்கிறது.

ஆப்கனின் அனைத்து இன, மத, அரசியல் குழுக்களையும் உள்ளடக்கிய அரசு இருப்பது முக்கியமானது என உறுப்பு நாடுகள் நம்புகின்றன என அதில் கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசை தலிபான்கள் அமைத்துள்ளனா். அதில் இடம்பெற்றுள்ள 14 அமைச்சா்கள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத கருப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணலூா் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

"தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்காக திமுகவும் அதிமுகவும் மறைமுகமாக கைகோத்துள்ளன என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது சரியா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சித்ரா பெளா்ணமி சிறப்பு பூஜை

கரூா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

வேளாண்துறையிலும் செயற்கை நுண்ணறிவு!

SCROLL FOR NEXT