இந்தியா

அரசியல் ஆய்வுக்கூடமாக திகழும் குஜராத்

DIN

குஜராத் முதல்வா் பூபேந்திர படேல் தலைமையிலான அமைச்சரவையில் 24 அமைச்சா்கள் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா். முதல்வர் பூபேந்திர படேலைப் போலவே, பெரும்பாலான அமைச்சர்களும் முதல் முறையாக அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் அரசியல் ஆய்வுக்கூடமாக எப்போதுமே குஜராத் அமைந்திருக்கிறது. இப்போதும் அதில் மாற்றமில்லை. 

21 புதிய முகங்கள், குஜராத் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன. இந்த மாபெரும் பரிசோதனை, வரும் 2022ஆம் ஆண்டு குஜராத் பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு நடத்தப்பட்டுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

முன்னாள் முதல்வா் விஜய் ரூபானி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சா்கள் யாருக்கும் புதிய அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை.

குஜராத்தின் முதல்வராக இருந்த விஜய் ரூபானி தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, புதுமுக எம்எல்ஏ-வான பூபேந்திர படேல் புதிய முதல்வராகக் கடந்த திங்கள்கிழமை பதவியேற்றாா். இந்நிலையில், 24 புதிய அமைச்சா்கள் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில ஆளுநா் ஆச்சாா்ய தேவவிரத் புதிய அமைச்சா்களுக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தாா். புதிய அமைச்சா்களில் 10 பேருக்கு கேபினட் அந்தஸ்தும், 14 பேருக்கு இணை அமைச்சா் அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது.

இணை அமைச்சா்களில் 5 பேருக்கு தனிப் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் ராஜேந்திர திரிவேதி, மாநில முன்னாள் பாஜக தலைவா் ஜித்து வகானி உள்ளிட்டோருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

முதல்வருடன் சோ்த்து அமைச்சரவையின் எண்ணிக்கை 25-ஆக அதிகரித்துள்ளது. அமைச்சரவையில் படேல் சமூகத்தைச் சோ்ந்த 6 பேருக்கும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த 6 பேருக்கும், பழங்குடியின பிரிவைச் சோ்ந்த 4 பேருக்கும், தாழ்த்தப்பட்ட பிரிவைச் சோ்ந்த 3 பேருக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. சமண சமயத்தைச் சோ்ந்த ஒருவருக்கும் அமைச்சா் பதவி வழங்கப்பட்டுள்ளது.

முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மூத்த தலைவா்களுக்கு மீண்டும் இடம் வழங்கப்படாது என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. அதேபோல், முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த யாருக்கும் இடமளிக்காமல் முற்றிலும் புதிய அமைச்சரவையை பாஜக அமைத்துள்ளது.

மத்திய இணை அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான பூபேந்திர யாதவ் இது பற்றி கூறுகையில், பல்வேறு தரப்பிலிருந்தும் நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். புதிய முகங்கள், இளைஞர்கள், அனுபவம் வாய்ந்தவர்கள் என்று அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அனைவருமே நிர்வாகத்தில் அதிக திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதன் மூலம் குஜராத் அரசு அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்கும் வழிவகை ஏற்பட்டுள்ளது. திறமை வாய்ந்த, அனுபவம் கொண்ட முன்னாள் அமைச்சர்கள், கட்சிப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு, கட்சியை மேம்படுத்தும் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று யாதவ் கூறுகிறார்.

குஜராத் மாநிலத்தில் ஜாதி, மதம், இனம் என எல்லா வகையிலும் ஒரு சமத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த அமைச்சரவையை உருவாக்குதில் பாஜக வெற்றி கண்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். யாருக்குமே எந்த வருத்தமும் ஏற்படாத வகையில் தேர்வு நடைபெற்றுள்ளது. 

ஆரம்பத்தில் முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் பூபேந்திர படேல் முதல், பெரும்பாலான அமைச்சர்கள் வரை, தங்களுக்கு பொறுப்பு வழங்குவது தொடர்பாக பாஜக தலைமையிடமிருந்து அழைப்பு வரும்போது நிச்சயமாக ஆச்சரியமடைந்திருப்பார்கள். அந்த ஆச்சரியம் அவர்கள் பொறுப்பேற்கும் வரை நிச்சயம் மாறியிருக்காது என்றே கூறப்படுகிறது.

அரசியலில் புதிய நகர்வுகளை மேற்கொள்வதிலும், மிகப்பெரிய முடிவுகளை எடுப்பதிலும் எப்போதும் மோடி கைதேர்ந்தவர் என்கிறார் மூத்த பத்திரிகையாளராக இருக்கும் அரசியல் நிபுணர்.

2005ஆம் ஆண்டிலும் குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்றபோது, உள்ளாட்சித் தேர்தலில் வழக்கமான சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்க மறுத்த மோடி, முற்றிலும் புதிய முகங்களாக தேர்தலில் களமிறக்கினார். அந்த அதிரடி நடவடிக்கையால், பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியது. அது முதலே, குஜராத்தில் பரிசோதிக்கப்பட்ட இந்த புதிய முயற்சி, பிற மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வெற்றியைக் கண்டது என்கிறார் தனது அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத நபர்.

அமைச்சரவை அனுபவமில்லாத ஒருவர் எவ்வாறு முதல்வராக சிறப்பாக செயல்படுவார் என்பதும், இது வரும் 2022ஆம் தேர்தலை எவ்வாறு பாஜகவுக்கு சாதகமாக மாற்றும் என்பதையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். அதில்லாமல், நரேந்திர மோடி தன் மீது மக்களுக்கு இருக்கும் ஈர்ப்பு மற்றும் அமித் ஷாவின் அதிக சக்தி வாய்ந்த தேர்தல் பிரசாரம் போன்ற யுக்திகளால் குஜராத் பேரவைத் தேர்தலில் வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது என்கிறார்கள்.

எவ்வளவுதான் சிந்தித்துச் செயல்பட்டாலும், ஏதாவது ஒரு குறை இருக்கத்தானே செய்யும். ஒரே ஒரு கவலை தோய்ந்த குரல் எழுகிறது. அது மன்சுக் வசவா, பாஜக மக்களவை உறுப்பினர் மற்றும் பரூச்சைச் ச்ரந்தவர். தனது பகுதியைச் சேர்ந்த யாருமே புதிய அமைச்சரவையில் இடம்பெறவில்லை என்று தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் பரூச் மாவட்டத்தில் மட்டும் இல்லை என்கிறார் அவர்.

பிரதமா் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பது என்ன?
புதிய அமைச்சா்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமா் மோடி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘கட்சியின் சிறந்த நிா்வாகிகளாகவும் மக்கள் சேவையில் அா்ப்பணிப்பு மிக்கவா்களாகவும் புதிய அமைச்சா்கள் திகழ்ந்தனா். கட்சியின் வளா்ச்சி சாா்ந்த கொள்கைகளையும் அவா்கள் முன்னெடுத்துச் சென்றனா். அமைச்சா்களாக அவா்களது பணி சிறக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

SCROLL FOR NEXT