இந்தியா

இணைய குற்றங்கள்: 2020-இல் 11.8 சதவீதம் அதிகரிப்பு

16th Sep 2021 03:50 AM

ADVERTISEMENT


புது தில்லி: இந்தியாவில் இணைய குற்றங்கள் (சைபர் கிரைம்) தொடர்பாக 2020-ஆம் ஆண்டில் 50,035 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும், இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 11.8 சதவீதம் கூடுதல் என்பதும் தேசிய குற்றப் பதிவுத் துறை (என்சிஆர்பி) புள்ளிவிவரத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

இவற்றில் 578 வழக்குகள், சமூக ஊடகங்களில் போலியான செய்திகளை வெளியிட்டது தொடர்பானவையாகும். 972 வழக்குகள் பெண்கள் மற்றும் குழந்தைகளை சமூக ஊடகங்கள் உள்ளிட்ட இணையவழியில் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்தல் தொடர்பானவை. போலியான சுயவிவரப் பதிவு தொடர்பாக 149 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இணையவழியில் தகவல் திருட்டு தொடர்பாக 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2020-இல் பதிவு செய்யப்பட்ட இணைய குற்ற வழக்குகளில், குற்றத்துக்கான நோக்கத்தைப் பொருத்தவரை 60.2 சதவீதம் மோசடி திட்டத்துடன் நடைபெற்றுள்ளன. அதாவது, 50,035 வழக்குகளில் 30,142 வழக்குகள் மோசடி திட்டத்துடன் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களாகும். இதற்கு அடுத்தபடியாக, 6.6 சதவீதம் (3,293 வழக்குகள்) பாலியல் அத்துமீறல் தொடர்பான வழக்குகள், மிரட்டி பணம் பறித்தல் தொடர்பாக 4.9 சதவீத (2,440 வழக்குகள்) வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக என்சிஆர்பி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வழக்குப் பதிவில் உ.பி. முதலிடம்: அதிக இணைய குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படும் மாநிலங்களைப் பொருத்தவரை 11,097 வழக்குகளுடன் உத்தர பிரேதசம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடகம் (10,741 வழக்குகள்), மகாராஷ்டிரம் (5,496), தெலங்கானா (5,024), அஸ்ஸாம் (3,530) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

ADVERTISEMENT

கர்நாடகத்தில் அதிக குற்றங்கள்: அதே நேரம், இணைய குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் 16.2 சதவீத குற்றங்களுடன் கர்நாடகம் முதலிடம் வகிக்கிறது. அதற்கு அடுத்தபடியாக தெலங்கானா (13.4 சதவீதம்), அஸ்ஸாம் (10.1 சதவீதம்), உத்தர பிரதேசம் (4.8 சதவீதம்), மகாராஷ்டிரம் (4.4 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

தலைநகர் தில்லியில் 2020-ஆம் ஆண்டில் 168 இணைய குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றங்களின் விகிதம் 0.8 சதவீதமாக உளளது என்றும் என்சிஆர்பி புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட இணைய குற்றங்களின் எண்ணிக்கை 44,735 ஆகும். 2018-ஆம் ஆண்டில் 27,248 இணைய குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT