இந்தியா

வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்ட 11 மாநிலங்கள் ரூ.15,721 கோடி கடன் திரட்ட மத்திய அரசு அனுமதி

15th Sep 2021 03:51 AM | நமது சிறப்பு நிருபர்

ADVERTISEMENT


புது தில்லி: மாநிலங்களில் கட்டுமானப் பணிகள், வளர்ச்சித் திட்டங்கள் போன்ற மூலதனச் செலவுகளை மேற்கொள்ளும் மாநிலங்களுக்கு மட்டுமே கூடுதல் கடன் திரட்ட மத்திய அரசு அனுமதிக்கிறது. இதன்படி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மத்திய அரசு நிர்ணயித்தபடி வளர்ச்சிப் பணிகளில் மூலதனச் செலவுகளை மேற்கொண்ட ஆந்திரம், ராஜஸ்தான் உள்ளிட்ட 11 மாநிலங்கள் ரூ. 15,721 கோடி கடன் திரட்ட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

மாநில அரசுகள் அதிக அளவிலான மூலதனச் செலவுகளை (கட்டுமானப் பணிகள், வளர்ச்சித் திட்டங்கள்) செய்யும் நிலையிலேயே பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்பட்டு, எதிர்காலத்தில் மாநிலத்தின் உற்பத்தித் திறன் அதிகரித்து பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இதனால் மானியங்கள், இலவசங்கள் போன்றவை வழங்கும் வருவாய்ச் செலவினங்களைக் குறைத்து மூலதனச் செலவுகளை அதிக அளவில் மேற்கொள்ளும் மாநிலங்களுக்கு மட்டுமே கூடுதல் நிதிக்கு கடனைத் திரட்ட மத்திய நிதியமைச்சகம் அனுமதிக்கிறது.

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் மாநிலங்கள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதம் என நிகர கடன் உச்சவரம்பு (என்பிசி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் மாநிலங்கள் மூலதனச் செலவுகளை அதிகரிக்கும்பட்சத்தில் 2021-22-ஆம் நிதியாண்டுக்கு கூடுதலாக அதிகபட்சம் 0.50 சதவீதம் வரை மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் கடனை திரட்டிக் கொள்ளும் தகுதியை மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை நிர்ணயித்துள்ளது. மாநிலங்களின் மூலதனச் செலவை அதிகரிப்பதற்கு கூடுதல் நிதி ஆதாரங்களைத்  திரட்ட மத்திய அரசு இதுபோன்ற அளவீடுகளை உருவாக்கியுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, கூடுதல் கடனைப் பெறுவதற்கு மூலதனச் செலவு 4 காலாண்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 2021-22-ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட மொத்த இலக்கில் 15 சதவீதத்தை முதல் காலாண்டிலும், 45 சதவீதத்தை இரண்டாவது காலாண்டிலும், 70 சதவீதத்தை மூன்றாவது காலாண்டிலும், மார்ச் 31, 2022-இல் 100 சதவீத மூலதனச் செலவு இலக்கை அடைந்திருந்தால் அந்த மாநிலங்கள் நிதி திரட்ட அனுமதிக்கப்படுகிறது.

இதில் நடப்பு 2021-22 நிதியாண்டின் முதல் காலாண்டில் மத்திய நிதி அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவிலான மூலதனச் செலவை 11 மாநிலங்கள் பூர்த்திசெய்துள்ளன. இந்த மாநிலங்களின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 0.25 சதவீதம் கூடுதலாக கடன் திரட்ட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதையடுத்து, இந்த 11 மாநிலங்களுக்கு ரூ. 15,721 கோடி நிதியை கடனாக திரட்டிக்கொள்ள மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது. இதில் ஆந்திரம் (ரூ.2,655 கோடி), ராஜஸ்தான் (ரூ.2,593 கோடி), மத்திய பிரதேசம் (ரூ.2,590 கோடி), கேரளம் (ரூ.2,255), ஹரியாணா (ரூ.2,105) போன்ற மாநிலங்கள் அதிக அளவிலும் மற்றும் பிகார், சத்தீஸ்கர், மணிப்பூர், மேகாலயம், நாகாலாந்து, உத்தரகண்ட் உள்ளிட்ட 11 மாநிலங்கள் இலக்கை அடைந்து சலுகையைப் பெற்றுள்ளன. தமிழகம் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

இந்த நிதியை இந்த மாநிலங்கள் பொதுச் சந்தையில் திரட்டிக்கொள்ள வேண்டும். மாநிலங்கள் கடனை வாங்கி நிதியை விரயம் செய்வதைத்  தடுக்கவே கடன் பெறுவதற்கு நிபந்தனைகளை மத்திய அரசு வகுத்துள்ளது.

மத்திய அரசு இந்த மாநிலங்களின் மூலதனச் செலவின் அடுத்த ஆய்வை வரும் டிசம்பர் மாதம் மேற்கொள்ளும். அப்போது, செப்டம்பர் 30, 2021 வரை மாநிலங்கள் மேற்கொண்டுள்ள மூலதனச் செலவுகள் மதிப்பீடு செய்யப்படும். அதன்பிறகு 2022, மார்ச் மாதத்தில் முதல் மூன்று காலாண்டுகளுக்கான மூலதனச் செலவின் அடிப்படையில் மூன்றாவது ஆய்வு நடத்தப்படும். இறுதிக்கட்ட ஆய்வு 2022, ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்படும். 

இறுதிக்கட்ட ஆய்வில் மூலதனச் செலவுகளில் ஏதாவது குறைபாடுகள் இருப்பின், 2022-23-ஆம் ஆண்டில் இந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் கடன் தொகையில் அது சரிசெய்யப்படும் எனவும் மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT