இந்தியா

மூன்று மாதங்களில் மூன்று பாஜக முதல்வர்கள் ராஜிநாமா!

11th Sep 2021 07:04 PM

ADVERTISEMENT


கடந்த மூன்று மாதங்களில் மூன்றாவது பாஜக முதல்வராக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி சனிக்கிழமை ராஜிநாமா செய்தார்.

உத்தரகண்ட்:

உத்தரகண்ட் முதல்வராக கடந்த மார்ச் 10-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார் தீரத் சிங் ராவத். அவர் பேரவைக்குத் தேர்வாகததால் அடுத்த 6 மாதங்களில் இடைத் தேர்தலில் போட்டியிட்டு பேரவைக்குத் தேர்வாக வேண்டிய சூழல் நிலவி வந்தது. ஆனால், அரசியல் குழப்பங்கள் மற்றும் இடைத் தேர்தல் குறித்த சரியான நிச்சயமற்றத் தன்மை உள்ளிட்ட காரணங்களால் ஜூலை 2-ம் தேதி ராஜிநாமா முதல்வர் பதவியை செய்தார். இவர் 115 நாள்கள் மட்டுமே முதல்வராகப் பதவி வகித்தார்.

இதன்பிறகு, உத்தரகண்டின் 11-வது முதல்வராக பாஜகவைச் சேர்ந்த புஷ்கர் சிங் தாமி பதவியேற்றார்.

ADVERTISEMENT

கர்நாடகம்:

கர்நாடக முதல்வராக இருந்த பி.எஸ். எடியூரப்பாவுக்கு சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்புகள் இருப்பதாக ஊடகங்களில் நீண்ட நாள்களாக செய்தி வந்துகொண்டிருந்தன. அவருடையப் பதவிக் காலம் 2023 வரை இருந்தது. ஆனால், இரண்டு ஆண்டுகள் மட்டுமே முதல்வர் பதவி வகித்த அவர் கடந்த ஜூலை 26-ம் தேதி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.

இதன்பிறகு, பசவராஜ் பொம்மை ஜூலை 28-ம் தேதி கர்நாடகத்தின் 23-வது முதல்வராகப் பதவியேற்றார்.

இதையும் படிக்க குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீர் ராஜிநாமா

குஜராத்:

இந்த நிலையில், மூன்றாவது பாஜக முதல்வராக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி சனிக்கிழமை ராஜிநாமா செய்துள்ளார். குஜராத்தின் வளர்ச்சிப் பயணம் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதல் மற்றும் புதிய தலைமையின் கீழ் தொடர வேண்டும் என்பதால் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ததாக அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

குஜராத்தில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் அவர் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூன்று மாதங்களில் மூன்றாவது பாஜக முதல்வர் ராஜிநாமா என்றால், நிகழாண்டில் மொத்தம் நான்கு பாஜக முதல்வர்கள் ராஜிநாமா செய்துள்ளனர். உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் கடந்த மார்ச மாதம் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.
 

Tags : Vijay Rupani
ADVERTISEMENT
ADVERTISEMENT