இந்தியா

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீர் ராஜிநாமா

11th Sep 2021 03:23 PM

ADVERTISEMENT

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தனது பதவியை திடீரென இன்று மாலை (சனிக்கிழமை) ராஜினாமா செய்தார். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் பொறுப்பிலிருந்து ரூபானி விலகியுள்ளார்.

விஜய் ரூபானி ராஜினாமா செய்துள்ளது சொந்த அமைச்சர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அடுத்த முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவாரா அல்லது குஜராத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. சட்டப்பேரவை தேர்தல் முன்கூட்டியே நடத்துவதற்கு கூட வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டுவருகிறது.

ரூபானி ராஜிநாமா செய்ததற்கான காரணம் குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், மாநில தலைமை மீது அதிருப்தி இருந்ததாகவும் அதன் காரணமாகவே பாஜக மேலிடம் மாற்றத்தை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாஜக இதையே வியூகமாக கொண்டுள்ளது. சமீபத்தில் கர்நாடக, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற அரசியல் நிகழ்வு இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. கடந்த ஆறு மாதங்களில், பாஜகவை சேர்ந்த நான்கு முதல்வர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

ADVERTISEMENT

பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே கடந்த ஜூலை மாதம், மாநில தலைமை மீது ஒரு பிரிவு அதிருப்தி தெரிவித்த நிலையில் கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா, தனது முதல்வர் பொறுப்பிலிருந்து விலகினார்.

முன்னாதாக, உத்தரகண்ட் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, அப்பொறுப்பு, தீரத் சிங் ராவத்திற்கு அளிக்கப்பட்டது. ஆனால், நான்கே மாதங்களில் அவரும் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். குஜராத்தை போன்றே உத்தரகண்டுக்கும் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT