இந்தியா

கொடநாடு வழக்கு: மேல் விசாரணைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

8th Sep 2021 04:18 AM |  நமது நிருபர்

ADVERTISEMENT

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் போலீஸாரின் மேல் விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி, கோவையைச் சேர்ந்த அனுபவ் ரவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
 நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள கொடநாட்டில் 2017, ஏப்ரலில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடந்தது. கொடநாடு எஸ்டேட் பங்களா காவலாளி ஓம் பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
 இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தற்போது போலீஸார் மேல் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கில் போலீஸ் தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கோவையைச் சேர்ந்த ரவி (எ) அனுபவ் ரவி என்பவர், மேல்விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 அதில், ஏற்கெனவே இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், போலீஸார் நீதிமன்றத்தின் அனுமதியின்றி மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்குத் தடை விதித்தும், வழக்கை விரைந்து விசாரித்து முடிக்குமாறும் உத்தரவிடக் கோரியிருந்தார். இந்த வழக்கை ஆகஸ்ட் 27-ஆம் தேதி விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை விசாரிக்க போலீஸாருக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.
 இதையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அனுபவ் ரவி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உயர்நீதிமன்றம் உரிய வகையில் கவனிக்காமல் தனது மனுவை தள்ளுபடி செய்துவிட்டதாகவும், இதனால் போலீஸாரின் மேல் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் விக்ரம் நாத், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
 அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சித்தார்த் லூத்ரா, வழக்குரைஞர்கள் என்.ஆனந்த் கண்ணன், பாலாஜி ஸ்ரீநிவாசன் ஆகியோர் ஆஜராகினர். மூத்த வழக்குரைஞர் சித்தார்த் லூத்ரா, "கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்கில் ஏற்கெனவே பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுவிட்டது. வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், போலீஸார் இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக மனுதாரர் அனுபவ் ரவிக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
 இந்த வழக்கில் சாட்சியாக உள்ள மனுதாரரை குற்றம்சாட்டப்பட்டவராக மாற்றுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது. இதனால், மனுதாரருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது' என்று வாதிட்டார்.
 அப்போது, நீதிபதிகள் அமர்வு, இந்த விவகாரத்தில் மனுதாரர் அரசுத் தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவரை குற்றம்சாட்டப்பட்டவராக போலீஸார் தற்போது வரை வழக்கில் சேர்க்கவில்லை. இதனால், போலீஸாரின் மேல் விசாரணையில் மனுதாரருக்கு என்ன பிரச்னை உள்ளது' என்று கேட்டது. இதையடுத்து, மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மனுவை நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 

Tags : Kodanad murder
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT