இந்தியா

75 வெளிநாட்டு இந்திய தூதரகங்களில் பழங்குடியினரின் தயாரிப்புப் பொருள்கள் மையம்

8th Sep 2021 03:57 AM |  நமது சிறப்பு நிருபர்

ADVERTISEMENT

சுதந்திர இந்தியாவின் 75-ஆவது ஆண்டையொட்டி, 75 இந்திய தூதரகங்களில், இந்திய பழங்குடியினரின் தயாரிப்புகள், கைவினைப் பொருள்கள் மையங்கள் திறக்கப்படுகின்றன. பழங்குடியினர் கூட்டுறவு சந்தை மேம்பாட்டுக் கூட்டமைப்பின் (டிரைஃபெட்) உதவியுடன் இந்த மையங்கள் வெளிநாட்டு தூதுரங்களில் ஏற்படுத்தப்படுவதாக மத்திய பழங்குடியினர் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
 முதலில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள இந்திய தூதுரகத்தில் இந்த மையத்தை இந்திய தூதரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சுசித்ரா துரை தொடக்கி வைத்துள்ளார்.
 முன்னாள் இந்திய தூதர் ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் பழங்குடியினரின் டிரைஃபெட் கண்காட்சி மையம் திறக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மத்திய பழங்குடியினர் துறை தெரிவித்துள்ளதாவது:
 தாய்லாந்தைத் தொடர்ந்து, அயர்லாந்து, கென்யா, இஸ்ரேல், அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், கிரீஸ், துருக்கி உள்ளிட்ட 75 நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள், இந்திய அலுவலகங்களில் இந்த மையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
 சுதந்திர இந்தியாவின் 75-ஆவது சுதந்திர ஆண்டை முன்னிட்டு மட்டுமல்லாமல் "ஆத்ம நிர்பார் பாரத்' என்ற தற்சார்பு இந்தியாவையும் இந்திய பழங்குடியினரின் உற்பத்தி பொருள்கள், கைவினைப் பொருள்கள் சர்வதேசத்துக்கும் வெளிப்படுத்தும் விதமாக மத்திய அரசின் பல்துறை அமைச்சகங்களுடன், டிரைஃபெட் இணைந்து இந்த மையங்களை அமைக்கிறது.
 மத்திய சுற்றுலாத் துறை, கலாசாரத் துறை, வர்த்தகத் துறை, பிரதமர் அலுவலகம், வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் அடுத்த 90 நாள்களில், வெளிநாடுகளில் உள்ள 75 இந்திய தூதரங்களில், இந்த மையங்கள் அமைக்கப்படுகின்றன. இதில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதோடு, ஆயுர்வேத பொருள்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளன. சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நியூயார்க் சதுக்கத்தில் பழங்குடியினர் தயாரிப்புப் பொருள்கள், ஆயுர்வேத பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டபோது ரூ.8.5 லட்சம் மதிப்பிலான பழங்குடியினர் தயாரிப்புப் பொருள்களுக்கு ஆர்டர் கிடைத்துள்ளது.
 இந்த ஊக்குவிப்பு விற்பனை மூலம், பழங்குடியினர் தயாரிப்புப் பொருள்களுக்கு சர்வதேச அளவில் மிகப் பெரிய சந்தை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், பழங்குடியினருக்கு நிலையான வேலைவாய்ப்பையும் அளிக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT