இந்தியா

படிக்காதவர்களைவிட படித்த பெண்களுக்குத்தான் அப்படி நடக்கிறதாம்

2nd Sep 2021 11:40 AM

ADVERTISEMENT


புது தில்லி: படிப்பறிவு இல்லாத, பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களை விட, நான்கு மடங்கு அதிகமாக, பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவில் குழந்தைகள் பிறக்கும் முறையை சமூக, பொருளாதார காரணிகள் மற்றும் மருத்துவத் தேவைகள் அடிப்படையில் பிரிக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஹார்வேர்ட் பல்கலைக்கழகம் மற்றும் கொரிய, இந்திய கல்வி நிலையங்கள் இணைந்து நடத்திய தேசிய குடும்ப நல ஆய்வு - 4ன் கீழ் கிடைத்திருக்கும் தகவல்களில், பொதுப் பிரிவினரை விடவும் பழங்குடியின பெண்களுக்கு குறைவாகவே அறுவை சிகிச்சை மூலம் மகப்பேறு நடப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே.. செப்.30க்குள் இதைச் செய்யாவிட்டால் எஸ்பிஐ கணக்கு முடக்கப்படும்

ADVERTISEMENT

இது தொடர்பான அறிவியல் ஆய்வில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், பட்டப்படிப்பு முடித்த 35.8 சதவீதம் பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் மகப்பேறு நடக்கும் போது, அடிப்படைக் கல்வி கூட கிடைக்காத பெண்களுக்கு இது 8.9 சதவீதமாக மட்டுமே இருப்பது தெரிய வந்துள்ளது.

பழங்குடியின பெண்களுக்கு 11.2 சதவீதம் பேருக்குத்தான் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைப்பேறு நடக்கும் போது இது பொதுப்பிரிவு பெண்களுக்கு 26.9 சதவீதமாக உள்ளது.

36 மாநிலங்களில், 640 மாவட்டங்களைச் சேர்ந்த 27,218 வகையான சமுதாயத்தில் நடந்த 1,36,985 பிறப்புகளில், 19.3 சதவீதம் அறுவை சிகிச்சை மூலம் நடந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

குழந்தை பிறப்புகளில் அதிகமாக அரசு மருத்துவமனைகளில் நடந்துள்ளன. அதில் குறிப்பாக சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில்தான் அதிகமாக நடந்துள்ளது. அங்கு 39.3 சதவீதமாக இருக்கும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் நடந்த சிசேரியன்கள் 11.1 சதவீதமாக உள்ளது.

மாநிலங்களுக்கு மாநிலம் சிசேரியன் சிகிச்சைகளில் மாறுபாடு இருப்பதாகவும், மிகவும் பின்தங்கிய மாவட்டங்களைக் கொண்ட பிகாரில் இது 10.7 சதவீதமாகவும், தெலுங்கானாவில் இதுவே 62.1 சதவீதமாகவும் உள்ளதாகவும், இதுவே தனியார் என்றால் 39.7 சதவீதம் சிசேரியன் என்ற அளவிலும், அரசு மருத்துவமனைகளில் 74.8 சதவீதமாகவும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தெலுங்கானாவிலேயே, பல்வேறு மாவட்டங்களில் சிசேரியன் எண்ணிக்கை  0 சதவீதம் முதல் 93.3 சதவீதம் வரை வேறுபடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு, எப்போதும் இல்லாத அளவுக்கு தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மூலம் மகப்பேறு நடப்பது அதிகரித்ததையடுத்து, இது குறித்து மாநில வாரியாக சோதிக்குமாறு நிபுணர் குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் இந்த நிபுணர் குழுவின் ஆய்வறிக்கைகள் இதுவரை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படவில்லை.

குழந்தை பிறப்பில் அறுவை சிகிச்சை மூலம் மகப்பேறு நடப்பது 10 - 15 சதவீதத்துக்கு மேல் அதிகமாக இருக்கக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

Tags : delivery college women caesarean
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT