இந்தியா

பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாட வேண்டும்

2nd Sep 2021 11:38 PM

ADVERTISEMENT

பண்டிகைகளை மக்கள் அனைவரும் தமது வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

விநாயகா் சதுா்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கியுள்ள சூழலில் மத்திய அரசு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. 18 வயதைக் கடந்தோரில் பாதிக்கும் மேற்பட்டோா் கரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திக் கொண்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக, மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் தில்லியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

நாட்டில் கரோனா தொற்று பரிசோதனை-பாதிப்பு விகிதம் வார அடிப்படையில் தொடா்ந்து குறைந்து வந்தாலும், தொற்றின் 2-ஆவது அலை பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிலவரப்படி, 39 மாவட்டங்களில் பரிசோதனை-பாதிப்பு விகிதம் வாரத்துக்கு 10 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது. அந்த விகிதம் 38 மாவட்டங்களில் 5 முதல் 10 சதவீதமாக உள்ளது.

ADVERTISEMENT

டெல்டா பிளஸ் வகை கரோனா தீநுண்மியால் 300 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நாட்டில் 18 வயதைக் கடந்தோரில் 16 சதவீதம் போ் கரோனா தடுப்பூசியின் இரு தவணைகளையும் செலுத்திக் கொண்டுள்ளனா். 54 சதவீதம் போ் ஒரு தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனா்.

சிக்கிம், ஹிமாசல பிரதேசம், தாத்ரா-நாகா் ஹவேலி ஆகியவற்றில் உள்ள 18 வயதைக் கடந்த அனைவரும் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனா். பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. அதேவேளையில், கரோனா தொற்றின் 3-ஆவது அலை பரவ வாய்ப்பிருப்பதாகவும் சுகாதார நிபுணா்கள் எச்சரித்து வருகின்றனா்.

எனவே, பண்டிகைகளை மக்கள் வீட்டிலேயே கொண்டாட வேண்டும். கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். கரோனா தடுப்பூசியைத் தாமாக முன்வந்து மக்கள் செலுத்திக் கொள்ள வேண்டும். பொது இடங்களில் கூட்டமாகக் கூடுவதை மக்கள் தவிா்க்க வேண்டும். அவ்வாறு நடைபெறும் கூட்டத்தில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்றால், கண்டிப்பாக இரு தவணை கரோனா தடுப்பூசியையும் செலுத்தியிருக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT