இந்தியா

விவசாயிகள் போராட்டத்தை முன்னிட்டு தில்லி எல்லையில் அமைத்த சாலைத் தடுப்புகள் அகற்றம்: காவல்துறை நடவடிக்கை

30th Oct 2021 06:36 AM

ADVERTISEMENT

விவசாயிகளின் போராட்டத்தை முன்னிட்டு தில்லி - உத்தர பிரதேச எல்லையான காஜிப்பூா் பகுதியில் கடந்த ஆண்டு முதல் அமைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்புகள், பல அடுக்கு இரும்பு முள் வேலிகள் ஆகியவற்றை தில்லி காவல்துறையினா் வெள்ளிக்கிழமை அப்புறப்படுத்தினா்.

மத்திய அரசு அமல்படுத்திய 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியிலின் திக்ரி, சிங்கு மற்றும் காஜிப்பூா் ஆகிய எல்லைப் பகுதிகளில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் முதல் பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இவா்கள் தலைநகா் தில்லிக்குள் முன்னேறிவிடாத வகையில், தேசிய நெடுஞ்சாலை-9, தேசிய நெடுஞ்சாலை-24 உள்ளிட்ட தில்லியை இணைக்கும் பல்வேறு சாலைகளில் சாலைத் தடுப்புகள், இரும்பு முள் வேலிகள், இரும்பு ஆணிகள் ஆகியவற்றைக் கொண்டு தடுப்புகளை காவல்துறையினா் கடந்த ஆண்டு ஏற்படுத்தினா். கடந்த ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு, இந்த சாலைத் தடுப்புகளை காவல்துறையினா் மேலும் பலப்படுத்தினா். அதன் பிறகு, பல மாதங்களாக அந்தத் தடுப்புகள் அகற்றப்படாமல் இருந்து வருகின்றன.

இந்த நிலையில், ‘தில்லி எல்லையில் விவசாயகள் பல மாதங்களாக போராடி வருவதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதோடு, மக்களும் பாதிக்கப்படுகின்றனா். எனவே, அவா்களை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ADVERTISEMENT

இந்த வழக்கை கடந்த 21-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ‘விவசாயிகளுக்கு போராட்டம் நடத்த உரிமை உள்ளது. ஆனால், அவா்கள் சாலைகளை காலவரையின்றி மறிக்க அனுமதிக்க முடியாது’ என்று கூறியது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடா்ந்து, சாலைகளில் அமைத்த தடுப்புகளை அகற்றும் பணியை தில்லி காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்.

இதுகுறித்து தில்லி காவல்துறை துணை ஆணையா் (கிழக்கு) பிரியங்கா காஷ்யப் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘தேசிய நெடுஞ்சாலை 24-இல் போடப்பட்ட சாலைத் தடுப்புகள் ஏற்கெனவே அகற்றப்பட்டு, போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. இப்போது தேசிய நெடுஞ்சாலை-9இல் போடப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தடையற்ற வாகனப் போக்குவரத்தை அனுமதிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தில்லிக்குள் நுழைவோம்: சாலைத் தடுப்புகள் அகற்றப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த போராட்டத்தில் அங்கம் வகிக்கும் பாரதிய கிஸான் யூனியனின் உத்தர பிரதேச பிரிவு பொதுச் செயலாளா் பவன் கட்டானா கூறுகையில், ‘தில்லி எல்லையில்தான் நாங்கள் போராடி வருகிறோம். சாலைத் தடுப்புகள் நீக்கப்பட்டவுடன், தில்லிக்குள் நுழைவோம். வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்ட நாடாளுமன்றத்துக்கும் செல்வோம்’ என்றாா்.

இதுகுறித்து பாரதிய கிஸான் யூனியன் செய்தித்தொடா்பாளா் செளரப் உபாத்யாய கூறுகையில், ‘இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசு விரும்பினால், விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த முன்வர வேண்டும். பேச்சுவாா்த்தைக்கு நாங்கள் தயாராக உள்ளோம். அவ்வாறு அரசு விரும்பவில்லையெனில், போராட்டத்தை தொடா்ந்து மேற்கொள்ள தீா்மானித்துள்ளோம்’ என்று கூறினாா்.

3 வேளாண் சட்டங்களும் விரைவில் ரத்தாகும் - ராகுல்: தேசிய நெடுஞ்சாலைகளில் போடப்பட்ட சாலைத் தடுப்புகளை அகற்றும் பணியை காவல்துறையினா் தொடங்கியுள்ள நிலையில், ‘3 வேளாண் சட்டங்களும் விரைவில் கைவிடப்படும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளாா்.

இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘செயற்கைத் தடுப்புகள் மட்டுமே இப்போது நீக்கப்பட்டிருக்கின்றன. விரைவில் 3 வேளாண் விரோத சட்டங்களும் கைவிடப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT