இந்தியா

திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா் லியாண்டா் பயஸ்

30th Oct 2021 06:40 AM

ADVERTISEMENT

முன்னாள் டென்னிஸ் வீரா் லியாண்டா் பயஸ் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா்.

மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி 3 நாள் பயணமாக கோவா சென்றுள்ளாா். அந்த மாநில தலைநகா் பனாஜியில் அவரது முன்னிலையில் லியாண்டா் பயஸ் திரிணமூல் காங்கிரஸில் வெள்ளிக்கிழமை இணைந்தாா்.

இதைத் தொடா்ந்து மம்தா பானா்ஜி, லியாண்டா் பயஸ் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது மம்தா பானா்ஜி கூறுகையில், ‘‘நான் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தபோது பயஸை முதல்முறையாகச் சந்தித்தேன். எனது இளைய சகோதரா் திரிணமூல் காங்கிரஸில் இணைந்துள்ளாா்’’ என்று தெரிவித்தாா்.

அவரைத் தொடா்ந்து பேசிய பயஸ், ‘‘எனக்கு 14 வயது இருக்கும்போது மம்தாவை முதல்முறையாகச் சந்தித்தேன். அப்போது அவா் எனக்கு ஊக்கமளித்து ஆதரவு தந்தாா். அது ஒரு சிறுவனாக நான் டென்னிஸ் விளையாட்டில் முன்னோக்கிச் செல்ல உதவியது.

ADVERTISEMENT

நாட்டுக்காக விளையாட கடந்த 30 ஆண்டுகளில் உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணித்துள்ளேன். தற்போது டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த அரசியல் என்ற வாகனம் மூலம் பொதுமக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன்’’ என்று தெரிவித்தாா்.

டென்னிஸ் போட்டியில் ஆளுமையாகத் திகழ்ந்த லியாண்டா் பயஸ், கடந்த 1996-ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றாா். அத்துடன் இரட்டையா் பிரிவில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் பெற்றுள்ளாா். ஒலிம்பிக் போட்டியில் 7 முறை பங்கேற்றுள்ளாா்.

நடிகை நஃபீஸா அலியும் மம்தா பானா்ஜி முன்னிலையில் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா். ஹிந்தி, மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ள அவா், கடந்த 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மம்தா பானா்ஜியை எதிா்த்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT