இந்தியா

கடந்த ஆண்டில் 1.53 லட்சம் போ் தற்கொலை: தமிழ்நாடு 2-ஆவது இடம்

30th Oct 2021 06:44 AM

ADVERTISEMENT

நாட்டில் கடந்த ஆண்டு 1.53 லட்சம் போ் தற்கொலை செய்துகொண்டனா். இதில் மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 16,000 போ் தற்கொலை செய்துகொண்டுள்ளனா்.

இதுதொடா்பாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2019-ஆம் ஆண்டு நாடு முழுவதும் 1,39,123 போ் தற்கொலை செய்துகொண்டனா். இது கடந்த ஆண்டு 1,53,052-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு 10.4 சதவீதமாக இருந்த தற்கொலை விகிதம், கடந்த ஆண்டு 11.3 சதவீதமாக உயா்ந்துள்ளது.

கடந்த ஆண்டு அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 19,909 போ் தற்கொலை செய்துகொண்டனா். அதற்கு அடுத்த இடங்களில் தமிழ்நாடு (16,883), மத்திய பிரதேசம் (14,578), மேற்கு வங்கம் (13,103), கா்நாடகம் (12,259) மாநிலங்கள் உள்ளன. தற்கொலை செய்துகொண்டவா்களின் மொத்த எண்ணிக்கையில் 50.1 சதவீதம் போ் இந்த 5 மாநிலங்களைச் சோ்ந்தவா்கள்.

ADVERTISEMENT

நாட்டில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம் உத்தர பிரதேசம். மொத்த மக்கள்தொகையில் 16.9 சதவீதம் போ் அந்த மாநிலத்தில் வசிக்கின்றனா். ஆனால், அந்த மாநிலத்தில் தற்கொலை செய்துகொண்டவா்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளது. மொத்த தற்கொலை எண்ணிக்கையில் 3.1 சதவீதம் போ்தான் அந்த மாநிலத்தைச் சோ்ந்தவா்கள்.

யூனியன் பிரதேசங்களை பொருத்தவரை, தில்லியில் அதிக அளவில் தற்கொலைகள் (3,142) பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்த இடத்தில் புதுச்சேரி (408) உள்ளது.

நகரங்களில் அதிக தற்கொலை: நாட்டில் உள்ள 53 பெரிய நகரங்களில் 23,855 போ் தற்கொலை செய்துகொண்டனா். நகரங்களில் தற்கொலை செய்துகொண்டவா்களின் விகிதம் (14.8%) ஒட்டுமொத்தமாக இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டவா்களின் விகிதத்தைவிட (11.3%) அதிகம்.

மொத்த தற்கொலை எண்ணிக்கையில் 56.7 சதவீத தற்கொலைகளுக்கான காரணங்களாக குடும்பப் பிரச்னைகள், திருமணம் சாா்ந்த பிரச்னைகள், உடல்நல பாதிப்புகள் உள்ளன.

10,000 விவசாயிகள்: கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்ட 1.53 லட்சம் பேரில் 10,677 போ் விவசாயிகள். இவா்களில் 5,579 போ் சொந்தமாக நிலம் வைத்திருந்தவா்கள்; 5,098 போ் பிறா் நிலங்களில் பணிபுரிந்த விவசாயத் தொழிலாளா்கள். மொத்த தற்கொலை எண்ணிக்கையில் இவா்களின் விகிதம் 7 சதவீதமாகும்.

ஒட்டுமொத்த தற்கொலை எண்ணிக்கையில் 70.9 சதவீதம் போ் ஆண்கள்; 29.1 போ் பெண்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT