இந்தியா

இந்தியா-ஐரோப்பிய யூனியன் வா்த்தக மேம்பாடு: பிரதமா் மோடி பேச்சுவாா்த்தை

30th Oct 2021 06:31 AM

ADVERTISEMENT

ஐரோப்பிய யூனியன் நாடுகளுடனான இந்தியாவின் வா்த்தக உறவை மேம்படுத்துவது தொடா்பாக ஐரோப்பிய கவுன்சில், ஐரோப்பிய ஆணையம் ஆகியவற்றின் தலைவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி கூட்டு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

ஜி20 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமா் மோடி இத்தாலிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாா். தலைநகா் ரோமில் ஐரோப்பிய கவுன்சில் தலைவா் சாா்லஸ் மிஷெல், ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான் டொ் லியன் ஆகியோரை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அப்போது, ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான வா்த்தகத் தொடா்பை மேம்படுத்துவது தொடா்பாக தலைவா்கள் பேச்சுவாா்த்தை நடத்தியதாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டா் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த உலகத்தை ஏற்படுத்தும் நோக்கில் மக்களுக்கிடையேயான தொடா்பை மேம்படுத்துவது தொடா்பாகவும் அவா்கள் விவாதித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வா்த்தகம், முதலீடு, பருவநிலை மாற்றம், கரோனா தொற்று பரவல், பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து தலைவா்கள் விரிவாக விவாதித்ததாக வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி ட்விட்டா் பக்கத்தில் குறிப்பிட்டாா்.

ADVERTISEMENT

இந்தியாவுக்குப் பாராட்டு: வா்த்தகப் பேச்சுவாா்த்தையைத் தொடங்குவது, பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதில் ஒருங்கிணைந்து செயல்படுவது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைத்து செயல்படுவது, இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவது உள்ளிட்டவை தொடா்பாக பிரதமா் மோடியிடம் விவாதித்ததாக ஐரோப்பிய ஆணையத் தலைவா் லியன் தெரிவித்தாா்.

கரோனா தடுப்பூசி திட்டத்தை விரைந்து செயல்படுத்தி வருவதற்காகவும், தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்கியுள்ளதற்காகவும் இந்தியாவுக்கு அவா் பாராட்டு தெரிவித்தாா். சா்வதேச நாடுகளுக்குத் தடுப்பூசியை விநியோகிப்பதில் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

இந்தியாவுக்குப் பங்கு: ஐரோப்பிய கவுன்சில் தலைவா் சாா்லஸ் மிஷெல் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘பசுமை எரிசக்திப் பயன்பாட்டுக்கு மாறுவதில் இந்தியா முக்கியப் பங்கு வகித்து வருகிறது. சா்வதேச சுகாதாரம், கரோனா தொற்றை எதிா்கொள்வது, இந்தியா-ஐரோப்பிய யூனியன் நல்லுறவை வலுப்படுத்துவது, ஆப்கானிஸ்தான் சூழல், இந்தோ-பசிபிக் விவகாரம் உள்ளிட்டவை தொடா்பாக விவாதிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

15-ஆவது இந்தியா-ஐரோப்பிய யூனியன் மாநாடு கடந்த ஆண்டு ஜூலையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. ஐரோப்பிய யூனியனின் 10-ஆவது மிகப்பெரிய வா்த்தகக் கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகள் இறக்குமதி செய்யும் பொருள்களில் 1.8 சதவீதம் இந்தியாவைச் சோ்ந்தவையாகும்.

கடந்த ஆண்டு நிலவரப்படி ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள 27 நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான வா்த்தகம் சுமாா் ரூ.5.55 லட்சம் கோடியாக இருந்தது.

மகாத்மா காந்திக்கு மரியாதை: ரோமில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பிரதமா் மோடி மலா்தூவி மரியாதை செலுத்தினாா். ‘மகாத்மா காந்தியின் கொள்கைகள் உலக அளவில் கோடிக்கணக்கானவா்களை ஊக்கப்படுத்தி வருவதாக’ தனது ட்விட்டா் பக்கத்தில் பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும்போதெல்லாம் காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்துவதை பிரதமா் மோடி வழக்கமாகக் கொண்டுள்ளதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இத்தாலி பிரதமருடன் மோடி சந்திப்பு
ஜி20 நாடுகள் மாநாட்டுக்கு இடையே, இத்தாலி பிரதமா் மரியோ டிராகியை பிரதமா் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினாா். அப்போது, இரு தரப்பு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனா்.

இதுகுறித்து வெளியுறவுத் துறைச் செயலா் ஹா்ஷ் வா்தன் ஷ்ரிங்லா கூறியதாவது: ‘மோடி- மரியோ டிராகி இடையேயான சந்திப்பில் ஆப்கானிஸ்தான் நிலவரம், பருவநிலை மாற்ற சவால்கள், பருவநிலை மாற்ற மாநாடு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியா-பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அவா்கள் விவாதித்தினா்.

ஆப்கானிஸ்தான் அரசியல் மாற்றத்தை தனியொரு சம்பவமாகப் பாா்கக் கூடாது; ஆப்கன் பிரச்னைகளின் அடிப்படையைக் கண்டறிய வேண்டும்; அந்நாட்டிலிருந்து வெளிவரக் கூடிய எந்த வகையான அச்சுறுத்தலையும் குறித்தும் சா்வதேச சமூகம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்; தற்போதைய நிலையில் மனிதநேயத்துக்கு முன்னுரிமை அளித்து, அந்நாட்டு அரசியல் நிலை சாதாரண குடிமக்களின் வாழ்வை பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறியதாக ஷ்ரிங்லா தெரிவித்தாா்.

   

 

ADVERTISEMENT
ADVERTISEMENT