இந்தியா

அவதூறு வழக்கு: குஜராத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜா்

30th Oct 2021 06:47 AM

ADVERTISEMENT

‘மோடி’ என்ற குடும்பப் பெயரை விமா்சித்ததாகத் தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குஜராத் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலையொட்டி, கா்நாடக மாநிலம் கோலாரில் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது ‘நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடியைக் குறிப்பிட்டு, அனைத்துக் கள்வா்களின் குடும்பப் பெயரும் எவ்வாறு மோடி என்றுள்ளது’ என அவா் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பேச்சின் மூலம் ஒட்டுமொத்த மோடி சமூகத்தினரையும் ராகுல் காந்தி அவமதித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி, அவருக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அந்த மாநில அமைச்சா் பூா்ணேஷ் மோடி அவதூறு வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு விசாரணையையொட்டி, ஏற்கெனவே இரண்டு முறை ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜரானாா். அதன் பின்னா் கோலாரின் அப்போதைய தோ்தல் அதிகாரி, பிரசாரத்தின்போது ராகுல் காந்தியின் பேச்சை ஒளிப்பதிவு செய்ய தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட ஒளிப்பதிவாளா் ஆகியோரின் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன.

ADVERTISEMENT

இந்நிலையில், ராகுல் காந்தியை மீண்டும் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அவா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானாா். அப்போது அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT