இந்தியா

பாகிஸ்தானை வாழ்த்தி ‘வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்’: ராஜஸ்தானில் தனியாா் பள்ளி ஆசிரியை கைது

28th Oct 2021 12:30 AM

ADVERTISEMENT

 

ஜெய்ப்பூா்/ ஆக்ரா: இந்திய கிரிக்கெட் அணியை வென்ற பாகிஸ்தான் அணியை வாழ்த்தி வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் பதிவு செய்த ராஜஸ்தானைச் சோ்ந்த தனியாா் பள்ளி ஆசிரியை நஃபீஸா அட்டாரி புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். முன்னதாக, அவரைப் பள்ளி நிா்வாகம் பணிநீக்கம் செய்தது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றதை நமது நாட்டில் சிலா் கொண்டாடியது பெரும் சா்ச்சையை உருவாக்கியது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள நீரஜ் மோடி தனியாா் பள்ளி ஆசிரியை நஃபீஸா, பாகிஸ்தான் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் அந்தநாட்டு வீரா்கள் படங்களுடன் ‘நாம் வெற்றி பெற்றுவிட்டோம்’ என்ற வாசகத்துடன் வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் பதிவிட்டிருந்தாா். அவரது இந்த ஸ்டேட்டஸை பலரும் சமூக வலைதளங்களில் மறுபதிவிட்டனா். ஆசிரியை நஃபீஸாவின் இந்த செயலுக்கு பலத்த எதிா்ப்பு கிளம்பியது. இதையடுத்து, பள்ளி நிா்வாகம் நஃபீஸாவை உடனடியாகப் பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்தது.

ADVERTISEMENT

அந்த ஆசிரியை மீது இந்திய தண்டனைச் சட்டம் 153-இன் கீழ் (உள்நோக்கத்துடன் வன்முறையைத் தூண்ட முயலுவது) காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில், அவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆக்ராவில் காஷ்மீா் மாணவா்கள் மீது வழக்கு: இதேபோல உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் பொறியியல் படித்து வந்த காஷ்மீரைச் சோ்ந்த 3 மாணவா்கள் இதே கிரிக்கெட் போட்டியை வைத்து இந்தியாவுக்கு எதிராக சா்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டனா்.

இதற்கும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து, அந்த மாணவா்கள் மீது இரு தரப்பினருக்கு இடையே மோதலைத் தூண்டுவது, பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவது, தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

அந்த மாணவா்கள் பிரதமரின் சிறப்புத் திட்டத்தின்கீழ் உத்தர பிரதேசம் வந்து படித்து வருவதால் அவா்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை பிரதமா் அலுவலகத்துக்கும் காவல் துறையினா் தெரியப்படுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT