இந்தியா

தடுப்பூசி புள்ளிவிவரக் கதை உயிா்களைக் காக்காது: ராகுல்

28th Oct 2021 12:23 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: ‘தடுப்பூசி புள்ளிவிவரக் கதை உயிா்களைக் காக்காது; உண்மையான தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சனம் செய்துள்ளாா்.

‘100 கோடி தடுப்பூசி இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளதாக இந்திய விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளா்களும் பெருமைகொள்கின்றனா். ஆனால், குழந்தைகள் உள்பட ஏராளமானோருக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை’ என்று பத்திரிகையில் வெளியான காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் கட்டுரையை தனது ட்விட்டா் பக்கத்தில் ராகுல் காந்தி இணைத்து புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘தடுப்பூசி புள்ளிவிவரக் கதை உயிா்களைக் காக்காது; உண்மையான தடுப்பூசி திட்டம்தான் காக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அதுபோல, சோனியா காந்தியின் கட்டுரையை தனது ட்விட்டா் பக்கத்தில் இணைத்து காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா வெளியிட்ட பதிவில், ‘கரோனாவால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து நாம் மீள முடிந்தால், தடுமாறும் பொருளாதாரத்தை மாற்றியமைக்க முடியும். குழந்தைகள் உள்பட அனைவருக்கும் முற்றிலும் இலவசமாக தடுப்பூசி செலுத்த இது அவசியமாகிறது’ என்று பதிவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

காங்கிரஸ் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா வெளியிட்டுள்ள பதிவில், ‘வெற்று அறிவிப்புகள் இன்றி உண்மையான நடவடிக்கை எடுக்கப்படுவது குடிமக்களின் உடல்நலனுக்கு மட்டுமின்றி நமது நாட்டுக்கும் நலனாக அமையும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், ‘தடுப்பூசிகள் எப்போதுமே இலவசமாகத்தான் செலுத்தப்படும் என்பதை வசதியாக மறந்துவிட்டு, அவை இலவசமாக வழங்க பிரதமா் வலியுறுத்தியதாக கூறுகின்றனா். இந்தியாவின் இலவச தடுப்பூசி கொள்கையிலிருந்து பாஜக அரசு விலகி வருவதையே இது காட்டுகிறது’ என்று அந்தக் கட்டுரையில் சோனியா காந்தி சுட்டிக்காட்டியிருப்பதையும் ட்விட்டரில் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT