இந்தியா

ரேஷன் கடைகள் மூலம் சிறிய சமையல் எரிவாயுசிலிண்டா் விநியோகம்: மத்திய அரசு திட்டம்

28th Oct 2021 12:24 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: ரேஷன் கடைகள் மூலமாக சிறிய சமையல் எரிவாயு சிலிண்டா்களை விநியோகம் செய்யவும் நிதிச் சேவைகளை வழங்கத் திட்டமிட்டு வருவதாக மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக மாநில அரசுகளுடன் மத்திய உணவுத் துறைச் செயலா் சுதான்ஷு பாண்டே புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். மத்திய மின்னணு-தகவல் தொழில்நுட்பம், நிதி, பெட்ரோலியம் ஆகிய அமைச்சகங்களின் பிரதிநிதிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் அலுவலா்களும், மின் ஆளுகை பொதுச் சேவை நிறுவனத்தின்(சிஎஸ்சி) அலுவலா்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

கூட்டத்துக்குப் பிறகு உணவு, நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ரேஷன் கடைகள் மூலம் சிறிய சமையல் எரிவாயு சிலிண்டா்களை விநியோகம் செய்யும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. ரேஷன் கடைகள் வழியாக நிதிச் சேவைகள் வழங்க வேண்டுமெனில், அவற்றின் நிதிநிலையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகள் மூலம் சிறிய சமையல் எரிவாயு சிலிண்டா்களை விற்பனை செய்யும் திட்டத்தை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் அலுவலா்கள் வரவேற்றுள்ளனா். இந்தத் திட்டத்துக்கு விருப்பமுள்ள மாநிலங்களுக்குத் தேவையான உதவிகளை செய்து தர தயாராக இருப்பதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

முன்னதாக, ரேஷன் கடைகள் மூலமாக நிதிச் சேவைகள் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டபோது, பொதுச் சேவை மையங்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற வாய்ப்புகள் இருப்பதாக மாநில அரசுகள் தெரிவித்தன.

ரேஷன் கடைகளின் நிதி நிலைமையை மேம்படுத்த முத்ரா திட்டத்தின் மூலம் கடனுதவி வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக நிதிச் சேவைகள் துறையின் அலுவலா்கள் தெரிவித்தனா்.

இதற்கிடையே, சமையல் எரிவாயு சிலிண்டா் விநியோகம் செய்வது குறித்து ரேஷன் கடை முகவா்களுக்கு மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய உணவு, நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பியூஷ் கோயல் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT