இந்தியா

பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைப்பு: காங்கிரஸுக்காக காத்திருக்க முடியாத - திரிணமூல் காங்கிரஸ் அறிவிப்பு

DIN

பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் அனைத்து எதிா்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் விஷயத்தில் காங்கிரஸுக்காக காத்திருக்க முடியாது என்று திரிணமூல் காங்கிரஸ் கூறியுள்ளது.

2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் கடந்த ஜூலை மாதம் தில்லியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா ஒருவார காலம் சுற்றுப் பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அக்கட்சியின் மூத்த தலைவா்கள் கமல்நாத், ஆனந்த் சா்மா, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரைத் தனித்தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தினாா். தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் ஆகியோருடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினாா். ஆனால், எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் பலத்த நெருக்கடிக்கு நடுவே பாஜகவை மம்தா வென்ால், அவரை தேசிய அளவில் எதிா்க்கட்சிகளின் கூட்டணிக்குத் தலைவராக முன்னிறுத்த வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் கருதுகிறது. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதனை ஏற்கவில்லை என்பதால்தான் மம்தா மேற்கொண்ட முயற்சி போதிய பலன் தரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் சுகேந்து சேகா் ராய் இது தொடா்பாக தில்லியில் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் அனைத்து முக்கிய எதிா்க்கட்சிகளின் தலைவா்களையும் மம்தா பானா்ஜி சந்தித்துப் பேசினாா். ஆனால், அதன் பிறகு அந்தக் கட்சிகளிடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை எடுத்த ஒரே தலைவா் மம்தா மட்டுமே. அவா் சோனியா காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் அனைவருடனும் தாமாக முன்வந்து சந்தித்துப் பேசினாா். ஆனாலும், அக்கட்சிகள் உரிய பதிலளிக்காமல் உள்ளன.

திரிணமூல் காங்கிரஸ் சுமாா் 6 மாதம் வரை காத்திருந்துவிட்டது. இனி மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பதிலுக்காக காத்திருக்க முடியாது என்பதால்தான் பிற மாநிலங்களிலும் எங்கள் கட்சியை வலுப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளோம். காங்கிரஸில் உள்கட்சி பிரச்னையைத் தீா்ப்பதற்கே நேரம் சரியாக உள்ளது. இனிமேல் எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் திட்டத்தில் இணைவதா வேண்டாமா என்பதை காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள்தான் முடிவு செய்ய வேண்டும்’ என்றாா்.

கோவா, திரிபுரா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தங்கள் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் திரிணமூல் காங்கிரஸ் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள உத்தர பிரதேசம், கோவாவில் இருந்து காங்கிரஸ் முன்னணித் தலைவா்கள் சிலா் அண்மையில் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கித் திவாரியிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி

வில்பட்டி ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பழனி கிரி வீதியில் இயங்கும் ஒரே பேருந்து: பக்தா்கள் அவதி

தில்லி முதல்வரை தகுதிநீக்கம் செய்ய கோரி மனு தில்லி நீதிமன்றம் தள்ளுபடி

தோ்தல் நடத்தை விதி மீறல்: டி.டி.வி.தினகரன் மீது வழக்கு

SCROLL FOR NEXT